PVR-INOX தியேட்டரில் அரை மணி நேரம் விளம்பரம்! இதென்ன ஓடிடியா? கேஸ் போட்ட பெங்களூர் இளைஞருக்கு வெற்றி
பெங்களூர்: PVR-INOX தியேட்டரில் அரை மணி நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் பெங்களூர் இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேரம் பொன் போன்றது என்று கூறி இழப்பீடு வழங்க PVR-INOXக்கு உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு 'சாம் பகதூர்' எனும் திரைப்படம் தியேட்டர்களில் இறங்கியிருந்தது. பெங்களூரை சேர்ந்த 30 வயதான அபிஷேக் என்பவர் 'BookMyShow' ஆப் மூலமாக 3 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். படம் தொடங்க வேண்டிய நேரம் மாலை 4.05. இரண்டரை மணி நேரம் படம் என்பதால் 6.30க்கு முடிந்துவிடும். எனவே, தனது அலுவலக பணிகளை இவர் 6.30க்கு மேல் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இங்குதான் டிவிஸ்ட். அதாவது படம் 4.05க்கு பதில் 4.30 மணிக்குதான் தொடங்கியுள்ளது. இடைப்பட்ட 25 நிமிடங்களில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. சிகரெட் பிடிப்பது குறித்து "நான்தான் முகேஷ் பேசுறேன்" என்கிற விழிப்புணர்வு விளம்பரம் எல்லா தியேட்டரிலும் ஒளிபரப்பாக்கப்படும். இது தெரிந்த விஷயம்தான்.
ஆனால், அபிஷேக் போயிருந்த PVR-INOX தியேட்டரில், சில திரைப்படங்களில் ட்ரைலர்களை காட்சிப்படுத்தியுள்ளன. இப்படியாக படம் 4.30க்கு தொடங்கப்பட்டு இரவு 7 மணிக்கு முடிக்கப்பட்டிருக்கிறது.
ஓடிடி தளங்களிலும், யூடியூப் போன்றவற்றிலும்தான் விளம்பரங்களின் தொல்லை அதிகமாக இருக்கும். ஆனால், காசு கொடுத்து படம் பார்க்க வந்த இடத்திலும் இப்படி விளம்பரங்களை போட்டு மண்டை சூடு ஏத்துறாங்களே என கடுப்பான அபிஷேக் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "ஐயா நான் 3 டிக்கெட் புக் செய்திருந்தேன். மாலை 6.30க்கு பிறக்கு எனக்கு அலுவலக வேலைகள் இருந்தன. ஆனால் படம் லேட்டாக தொடங்கப்பட்டு, லேட்டாக முடிக்கப்பட்டதால் என்னால் அலுவலக வேலையை செய்ய முடியவில்லை. இதனால் எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் வேலையில் அமராததால், மேனேஜ்மென்டிடமிருந்து கடி வாங்கியிருக்கிறேன். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
ஆனால் மறுபுறம் எதிர் மனு தாக்கல் செய்திருந்த PVR-INOX, "சமூக அக்கறையின் அடிப்படையில் சில விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்ப எங்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே, இந்த மனு தேவையில்லாதது. உடனடியாக இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது, "தியேட்டருக்கு வருபவர்கள் காசு கொடுத்து படத்தைதான் பார்க்க வருகிறார்கள். விளம்பரங்களை அல்ல. அதனால், விழிப்புணர்வு விளம்பரங்களை படம் தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் வரை ஒளிபரப்பினால் போதும். அதேபோல, இடைவெளி நேரத்தில் விளம்பரங்களை போட்டுக்கொள்ளுங்கள். ஏன் படம் தொடங்கும் நேரத்தில் 25-30 நிமிடங்களுக்கு விளம்பரங்களை போட வேண்டும்?
நேரம் பொன் போன்றது. இன்னைக்கு இருக்கும் பரபரப்பான சூழலில், ஒருவரை 30 நிமிடங்களை வரை சும்மா உட்கார வைத்து விளம்பரங்களை பார்க்க வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக ரூ.50,000 தொகையை மனுதாரர் அபிஷேக்குக்கு வழங்க வேண்டும். அதேபோல வழக்கு தொகைக்காக ரூ.5000 மற்றும் மன வேதனைக்கு நஷ்டஈடாக ரூ.10,000 என மொத்தம் ரூ.65,000 வழங்க வேண்டும்.
தவிர, ரூ.1 லட்சம் தொகையை நீதிமன்றத்திற்கு அபராதமாக வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த பஞ்சாயத்தில் 'BookMyShow' ஆப் மீது எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, இந்த ஆப்-ஐ வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என்றும் உத்தரவில் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications