வழி விடமாட்டீயா? 'அந்த' விரலை காட்டிய பைக்கர்.. பிரித்து மேய்ந்த பஸ் டிரைவர்! பெங்களூரில் ஷாக்
பெங்களூரு: பைக் ஓட்டுநர் ஒருவர் 'நடு விரலை' காட்டியதாக கூறி அவரை பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பைக் ஓட்டுநருக்கு காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பேருந்து ஓட்டுநர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வீடியோ
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.22) நடந்துள்ளது. அதாவது அன்று பிற்பகல் யெலஹங்காவில் இரண்டு மாநகர பேருந்துகள் சாலையில் சென்றுகொண்டிருந்துள்ளன. அப்போது ஒரு பேருந்தின் பக்கவாட்டில் பைக்கில் வந்த நபர் பேருந்து ஓட்டுநரை பார்த்து நடு விரலை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த பைக்கை மறித்த மாநகர பேருந்து ஓட்டுநர், பைக் ஓட்டுநரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். பின்னர் இது முற்றி வாக்குவாதமாக மாறியுள்ளது. முடிவில் பேருந்து ஓட்டுநர், பைக் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

தாக்குதல்
இதனை பேருந்தில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். தாக்குதலில் பைக்கை ஓட்டிவந்த போனிஃபேஸ் எனும் நபர் யெலஹங்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், சம்பவத்தன்று யெலஹங்கா புதுநகரின் புத்தேனஹள்ளியில் உள்ள காந்தி ஸ்வீட்ஸ் அருகே இரண்டு மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றுகொண்டிருந்ததாகவும், இதனால் தனக்கு வழிவிடுமாறு கூறியதாகவும் அப்போதும் வழிவிடாததால் கையில் சைகை செய்ததாகவும் இதனை தவறாக புரிந்துகொண்டு தன்னை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நடுவிரல்
முதலில் ஓட்டுநர் தாக்கியதாகவும் பின்னர் பைக் சாவியை கொடுக்காமல் நடத்துநரும் தாக்குதலில் ஈடுபட்டு பஸ்ஸிலேயே தன்னை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த புட்டனஹள்ளி டிப்போவுக்கு அழைத்துச் சென்றதாகவும் போனிஃபேஸ் கூறியுள்ளார். இதேபோல பேருந்து ஓட்டுநர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பைக் ஓட்டுநர் தன்னை பார்த்து ஆபாசமான வகையில் நடு விரலை உயர்த்தி காட்டியதாகவும் அதனால்தான் தான் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு நேர மேலாண்மை இருப்பதாகவும், இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அடுத்த நிறுத்தத்தை அடைய வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் போக்குவரத்து நெரிசல், பேருந்தில் ஏற்படும் கோளாறு, எரிபொருள் சேமிப்பு, பணிகளின் கவனம் என பல அம்சங்களை கவனத்தில் வைத்து பேருந்தை தாங்கள் இயக்குவதாகவும் இவ்வாறு இருக்கையில் பைக் ஓட்டுநர் செய்த சம்பவம் தங்களை நிச்சயம் கோபப்படுத்தும் என்றும் பேருந்து ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications