எரிமலை எப்படி பொறுக்கும்? எடியூரப்பா கொந்தளிப்பாம்! தமிழகத்துக்கு காவிரி நீர் தர பாஜக எதிர்ப்பு!
பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 18 நாட்களுக்கு 3,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைக்கு மூத்த பாஜக தலைவரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் நேற்றைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதனை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

காவிரியில் சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது என்பது கன்னட விவசாயிகளின் போராட்டம். ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த் நடத்திவிட்டனர். காவிரி பிரச்சனையில் நாளை மறுநாள் கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படும் நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் இப்பரிந்துரை முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாடு அரசு தரப்பில் வினாடிக்கு 12,500 கன அடி நீர் கேட்கப்பட்டது. கர்நாடகா அரசு தரப்பில் வினாடிக்கு 5,000 கன அடி நீர்கூட தர இயலாது என தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகா மக்களுக்கும் அவர்கள் நடத்தும் போராட்டத்துக்குமான வெற்றி. காவிரி பிரச்சனையில் தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் அரசியல் செய்கின்றனர். காவிரியில் எப்போதும் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்படும். தற்போது வினாடிக்கு 1,000 கன அடிநீர் கூடுதலாக திறந்தாலே போதும் என்றார்.

ஆனால் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை மிக வன்மையாக கண்டித்துள்ளார் பாஜகவின் எடியூரப்பா. இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, கன்னடர்களுக்கு எதிரான மரண ஓலை இது. காவிரியில் கூடுதல் நீரை திறப்பது என்பது கர்நாடகாவின் சுயமரியாதைக்கு அச்சுறுத்தல். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாகவே இந்த நிலைமை உருவாகிவிட்டது. விவசாயிகளின் நம்பிக்கையை கர்நாடகா காங்கிரஸ் அரசு காவு வாங்கிவிட்டது. இனியும் கர்நாடகா மக்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது. இவ்வாறு எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
