பெங்களூர் ஹோட்டலில் நைசாக வெடிகுண்டு இருந்த மர்ம பையை விட்டுச் சென்ற ஆசாமி.. திடுக் தகவல்
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில், ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேர் படுகாயமடைந்தனர்.

முதலில் சிலிண்டர் தான் வெடித்தது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சிலிண்டர் வெடித்ததா? அல்லது வேறு ஏதுமா? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர். இதேபோல், மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வும் ராமேஸ்வரம் கஃபேவுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா: இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "இத்தகைய விஷம செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து நிச்சயம் தண்டைன வழங்குவோம். பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கடினமான நேரங்களில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ள முதல்வர் சித்தரமையா.. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கஃபே உரிமையாளர் விளக்கம்: இதேபோல், ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரான திவ்யா ராகவேந்திராவும் சிலிண்டர்கள் வெடித்தது போல் இல்லை. கைகழுவும் இடம் அருகே தான் ஒரு பை இருந்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர். அங்கு ஏதும் சிலிண்டர்கள் கிடையாது. எனவே சிலிண்டர் வெடிக்கவில்லை. யாரோ ஒரு நபர் வைத்து சென்ற பையில் இருந்து தான் வெடித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டு சென்ற பையில் இருந்த பொருள் தான் வெடித்ததாக ஓட்டல் உரிமையாளர் கூறியதாக பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:- ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீ நாகராஜிடம் பேசினேன். வாடிக்கையாளர் விட்டு சென்ற பை ஒன்றே வெடி விபத்துக்கு காரணம் என்று அவர் கூறினார். சிலிண்டர் விபத்து இல்லை எனவும் கூறினார். விபத்தில் ஊழியர் ஒருவர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறினார்" என்று பதிவிட்டுள்ளார்.
போலீசார் விசாரணை: ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். வெடிபொருள் அடங்கிய பையை வைத்து சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications