Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமாரசாமியை வீழ்த்திய டிகே சிவக்குமார்.. சென்னபட்டணா இடைத்தேர்தலில் நிகில் தோல்வி! காங்கிரஸ் வெற்றி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் குமாரசாமி VS டிகே சிவக்குமார் என்ற அதிகார போட்டியில் டிகே சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி பெங்களூர் புறநகர் லோக்சபா தேர்தலில் தம்பி டிகே சுரேசை, தேவேகவுடாவின் (குமாரசாமியின் தந்தை) மருமகன் மூலம் வீழ்த்தியதற்கு டிகே சிவக்குமார் பழி தீர்த்துள்ளார்.

கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதி எம்எல்ஏவாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி இருந்தார். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி உள்ளார்.

election results 2024 channapatna by election results nikhil kumaraswamy

இதையடுத்து சென்னப்பட்டனா எம்எல்ஏ பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானது. அதன்பிறகு கடந்த 13ம் தேதி சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி வேட்பாளராக களமிறங்கினார். இதனால் இந்த தொகுதியில் பாஜக சார்பில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிய சிபி யோகேஷ்வர் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் சென்னப்பட்டணா தொகுதி வேட்பாளராக சிபி யோகேஷ்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.

சென்னப்பட்டனா என்பது குமாரசாமி எம்எல்ஏவாக இருந்த தொகுதி. அதேபோல் ராமநகர் மாவட்டம் என்பது துணை முதல்வரும், கர்நாடகா காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமாகும். குமாரசாமி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு இது மிகவும் முக்கியமான தேர்தலாகும். இருவரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, இருவரின் செல்வாக்கு சம்பந்தப்பட்டது என்பதால் இந்த தொகுதியின் தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மகன் நிகில் குமாரசாமியை வெல்ல வைக்க குமாரசாமியும், தனது சொந்த மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வரை வெல்ல வைக்க டிகே சிவக்குமாரும் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தனர்.

மேலும் நிகில் குமாரசாமி கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியிலும், அதன்பிறகு 2023ல் ராமநகர் சட்டசபை தொகுதியிலும் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார். அவரது தாத்தா தேவேகவுடா முன்னாள் பிரதமர். தந்தை குமாரசாமி முன்னாள் முதல்வர், தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். இப்படி அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும் கூட நிகில் குமாரசாமி தேர்தலில் இன்னும் ஒருமுறை கூட வெல்லவில்லை. இதனால் அவருக்கும் இந்த இடைத்தேர்தல் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

கடந்த 13ம் தேதி நடந்த சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் மொத்தம் 88.80 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நிகில் குமாரசாமி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சிபி யோகேஷ்வர் பின்தங்கினார்.

அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு வருகிறது. 6வது சுற்று முடிவில் காலை 9 மணி நிலவரப்படி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளர் நிகில் குமாரசாமி முன்னிலை வகித்தார். நிகில் குமாரசாமி மொத்தம் 30,674 ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் 29,981 ஓட்டுகள் பெற்றுள்ளார். இருவருக்கும் சுமார் 700 ஓட்டுகள் தான் வித்தியாசம் உள்ளது. இதனால் அங்கு கடும் போட்டி நிலவியது.

அதன்பிறகு டிரெண்ட் என்பது மாற தொடங்கியது. காலை 10.45 மணி நிலவரப்படி சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் 11,174 ஓட்டுகள் முன்னிலை பெற்றார். அவர் மொத்தம் 45,982 ஓட்டுகள் பெற்றுள்ளார். நிகில் குமாரசாமி 34,808 ஓட்டுகள் பெற்று பின்தங்கி இருந்தார்.

அதன்பிறகு கடைசியாக காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் வெற்றி பெற்றார். சிபி யோகேஷ்வர் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 642 ஓட்டுகள் பெற்றார். நிகில் குமாரசாமி 87,229 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் சிபி யோகேஷ்வர், நிகில் குமாரசாமியை 25 ஆயிரத்து 413 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளார்.

ஏற்கனவே நிகில் குமாரசாமி 2 தேர்தலில் தோற்ற நிலையில் தற்போது 3வது முறையாக வீழ்ந்துள்ளார். இதன்மூலம் செல்வாக்கை நிரூபிக்கும் போட்டியில் குமாரசாமியை, டிகே சிவக்குமார் வீழ்த்தி உள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் தோல்வியடைந்தார்.

இந்த தொகுதியில் 2012 இடைத்தேர்தல், 2014, 2019 ஆகிய தேதிகளில் டிகே சுரேஷ் வென்ற நிலையில் இந்த முறை தோல்வியடைந்தார். அவர் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்ட டாக்டர் மஞ்சுநாத்திடம் தோல்வியடைந்தார். மஞ்சுநாத் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) மருமகன் ஆவார்.

இதில் டிகே சுரேஷ் மற்றும் டிகே சிவக்குமார் பெரும் வருத்தமடைந்தனர். இந்நிலையில் தான் தற்போது தேவேகவுடாவின் பேரனும், குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியை இடைத்தேர்தலில் டிகே சிவக்குமார் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+