சென்னைக்கு அதிர்ச்சி.. அசால்டாக ஓவர்டேக் செய்த பெங்களூர் ஏர்போர்ட்.. ஒன்றல்ல 2 விஷயங்களில் பெரிய அடி
பெங்களூர்: நமது நாட்டில் பரபரப்பான விமான நிலையங்கள் லிஸ்ட் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த செப். மாதம் அதிக சர்வதேச பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்களில் சென்னை 3வது இடத்தில் இருந்த நிலையில், அக். மாதம் அது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5ம் இடத்தில் இருந்த பெங்களூர் சென்னையை ஓவர்டேக் செய்து 3ம் இடம் பிடித்துள்ளது.
சென்னையில் இப்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. விமானப் பணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அந்த தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குச் சென்னை ஏர்போர்ட் இல்லை என்று தொடர்ந்து புகார் இருக்கிறது.

இதனால் சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவை என்ற குரல் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையம் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சென்னை ஏர்போர்ட்: அதாவது கடந்த அக். மாதம் அதிக சர்வதேச பயணிகளைக் கையாண்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னையை பின்னுக்குத் தள்ளி பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த டேட்டாவின்படி, கடந்த அக். மாதம் நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லி விமான நிலையம் 17.5 லட்சம் சர்வதேச பயணிகளைக் கையாண்டுள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக நாட்டின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் மும்பை 12.5 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது.
பெங்களூர் ஏர்போர்ட்: இந்த இரு நகரங்களைத் தொடர்ந்து பெங்களூர் விமான நிலையம் 4.8 லட்சம் சர்வதேச பயணிகளையும் கையாண்டுள்ளது. பெங்களூரைத் தொடர்ந்து சென்னை 4.5 லட்சம் சர்வதேச பயணிகளையும் கொச்சி 4.1 லட்சம் சர்வதேச பயணிகளையும் கையாண்டுள்ளது. பெங்களூர் ஏர்போரட் கடந்தாண்டு அக். மாதம் 3.9 லட்சம் சர்வதேச பயணிகளை மட்டுமே கையாண்ட நிலையில், இந்தாண்டு அது 4.8 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது ஓராண்டில் 24.3% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப். மாதம் டெல்லி, மும்பை விமான நிலையங்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் கொச்சி இருந்தது. 4.39 லட்சம் சர்வதேச பயணிகளுடன் பெங்களூர் 5வது இடத்திலேயே இருந்தது. ஆனால், அக். மாதம் நிலைமை மொத்தமாக மாறி, சென்னை கொச்சியை ஓவர்டேக் செய்து பெங்களூர் 5வது இடத்தை பிடித்துள்ளது.
இரண்டு விஷயங்களில்: சர்வதேச பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டுப் பயணிகளிலும் டெல்லி மற்றும் மும்பையைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே பெங்களூர் ஏர்போர்ட் இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் பெங்களூர் ஏற்போர்ட்டில் 30.8 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பயணித்துள்ளனர். டெல்லியில் 46.8 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் மும்பையில் 31.6 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் பயணித்துள்ள நிலையில், 3வது இடத்தில் பெங்களூர் வருகிறது.
ஒட்டுமொத்தமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்திலும் டெல்லி (64.4 லட்சம் பயணிகள்) மற்றும் மும்பை (44.2 லட்சம் பயணிகள்) விமான நிலையங்களைத் தொடர்ந்து 35.7 லட்சம் பயணிகளுடன் பெங்களூர் ஏர்போர்ட் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நேரடி விமான சேவை: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இப்போது மொத்தம் 34 விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயக்கும் நிலையில், 29 சர்வதேச நகரங்களுடன் நேரடி விமானச் சேவையைக் கொண்டுள்ளது. சமீபத்தில் பெங்களூரில் இருந்து நேரடியாக மொரிஷியஸுக்கு இண்டிகோ விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது. அதேபோல வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் மலேசியாவின் லங்காவிக்கும் நேரடி விமானச் சேவை வரவுள்ளது.. மேலும், பெங்களூரிலிருந்து அபுதாபிக்கு ஆகாசா ஏர் நிறுவனமும் நேரடி விமானச் சேவையைத் தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications