காங்கிரஸ் ‛ஸ்கெட்ச்’.. துரத்தும் தோல்வி பயம்! கர்நாடகாவில் தொகுதி மாறும் முதல்வர் பசவராஜ் பொம்மை?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வி பயத்தில் தனது சொந்த தொகுதியான சிக்கான் விட்டுவிட்டு வேறு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக பசவராஜ் பொம்மை வேறு 2 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே 24ல் முடிவடைய உள்ளதால் தற்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவளையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆவலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றனர்.

கருத்து கணிப்பில் பாஜக பின்னடைவு
இதற்கிடையே தேர்தல் தொடர்பாக ஏராளமான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும், சில கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் மெஜாரிட்டியடன் ஆட்சியை பிடிக்கும் எனவும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 40 சதவீத கமிஷன் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, இடஒதுக்கீடு விவகாரம், அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வை அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

தொகுதி மாறும் பசவராஜ் பொம்மை?
இதனால் பாஜக வேட்பாளர் தேர்வில் அதிக கவனத்துடன் செயல்படுகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக இன்னும் வேட்பாளர்கள் விபரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் தான் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008 முதல் தற்போது வரை 3 முறை எம்எல்ஏவாக உள்ளார். இதற்கிடையே தான் பசவராஜ் பொம்மை வரும் தேர்தலில் தொகுதி மாற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரணம் என்ன?
அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பசவராஜ் பொம்மையை தோற்கடிக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மெகாபிளானை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் லிங்காயத் மற்றும் முஸ்லிம் மக்களின் ஓட்டுகள் அதிகம். பசவராஜ் பொம்மை லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் கடந்த முறை காங்கிரஸிம் முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான வினய் குல்கர்னியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் லிங்காயத் ஓட்டுகள் பிரியும். மேலும் முஸ்லிம்களின் ஓட்டுகளும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்பதால் வினய் குல்கர்னி எளிதாக வெற்றி பெறலாம் என காங்கிரஸ் கணக்கீட்டுள்ளது. அதேபோல் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் இந்த முறை லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஸ்ட்ராங்கான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்த முறை பசவராஜ் பொம்மையில் வெற்றி என்பது சிக்கான் தொகுதியில் எளிதாக இருக்காது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்த தொகுதிக்கு மாறுகிறார்?
இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை சிக்கான் தொகுதிக்கு பதில் தாவணகெரே வடக்கு அல்லது சென்னகிரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த 2 தொகுதிகளிலும் லிங்காயத் சமுதாயத்தினர் அதிகம் உள்ளனர். இதனால் வெற்றி எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இது கர்நாடகாவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் சொல்வது என்ன?
இதற்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, ‛‛நான் சிக்கான் தொகுதியில் தான் போட்டியிட உள்ளேன். வேறு தொகுதியில் போட்டியிடவில்லை'' என தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட பசவராஜ் பொம்மை எந்த தொகுதியில் களமிறங்க உள்ளார் என்பது பாஜகவின் மேலிட முடிவை சார்ந்தது தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். மேலும் அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ‛‛முதல்வர் என்ற முறையில் பசவராஜ் பொம்மை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியில் களமிறங்க நினைக்கிறார். இதற்கு பாஜக மேலிடம் ஒகே சொன்னால் தொகுதி மாற்றம் என்பது நிச்சயம் நடக்கும்'' என்றனர்.












Click it and Unblock the Notifications