மங்களூரில் தொடரும் கொலைகள்! பதறும் மக்கள்! விசாரணையில் குதித்த போலீஸ்.. அரசியல் காழ்ப்புணர்ச்சியா?
பெங்களூரூ: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சமீபத்தில் பாஜக இளைஞர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அதே பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடம் மாவட்டத்தின் பெல்லாரே கிராமத்தில் கடந்த 26ம் தேதி இரவு பிரவீன் நெட்டாறு எனும் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை
இவர் பாஜகவின் வாலிபர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினராவார். கோழிக்கடையை நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று இரவு தனது கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பிரவீன் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பிரவீனை மீட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மங்களூர்
ஆனால் பிரவீன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 32 வயதான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா சங்கத்தின் உறுப்பினர் பிரவீனின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர். இந்த கொலைக்கு பின்னால் பாப்புலர் ஃப்ரன்ட்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ இருப்பதாக வலதுசாரி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

யார் காரணம்
இந்நிலையில் சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்றிரவு அரங்கேறியுள்ளது. 23 வயதான ஃபாசில் துணிக்கடையில் மற்றொருவருடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், கருப்பு முகமூடி அணிந்த சில நபர்கள் ஃபாசில் நின்றுகொண்டிருந்த கடைக்கு ஓடுவதை காணமுடிகிறது. இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி மற்றும் கம்பு கொண்டு ஃபாசிலை தாக்குகின்றனர்.

பின்னணி
தாக்குதலில் ஃபாசில் நிலைகுலைந்து கீழே விழுகிறார். அவர் மீது கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மை விழுகிறது. அதன் பின்னரும் மர்ம நபர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்கின்றனர்.

தாக்குதல்
இந்த தாக்குதலில் ஃபாசில் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும், குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்படுத்த சம்பவம் நடந்த பகுதியான சூரத்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முல்கி, பனம்பூர், பாஜ்பே ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
இந்த உத்தரவு நாளை (ஜூலை 30) வரை அமலில் இருக்கும் என மங்களூரு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி சசிகுமார் கூறியுள்ளார்.அதேபோல அனைத்து மதுபான கடைகளும் மூடப்படுவதாகவும், கர்நாடகா-கேரளா எல்லையில் உள்ள 19 வாகன பரிசோதனை மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் சசிகுமார் கூறியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, "சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications