இன்று தேசிய பொறியாளர்கள் தினம்.. கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? யார் இந்த விஸ்வேஸ்வரய்யா?
பெங்களூர்: இன்று நாடு முழுவதும் தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் பொறியாளர்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றிக்கொண்டிருப்பது அவர்கள்தான்.
கட்டடங்களை கட்டுவது மட்டும்தான் பொறியாளர்களின் பணி என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், மக்களை வெள்ள பாதிப்புகளிலிருந்து மீட்பது கூட ஒரு சிறந்த பொறியாளரின் பணி என்று அதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கி பொறியாளர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்தவர்தான் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா.
தக்காண பீடபூமியில் இவர் உருவாக்கிய தனித்துவமான பாசன திட்டமுறை இவருக்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

பொறியாளர்கள்
தங்கள் துறைக்கான வேலையை தவிர்த்து இன்ன பிற வேலைகளை செய்யும் நிலையில் பொறியாளர்கள் மலிந்துள்ள இந்த காலத்தில் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுவது சற்று பரிசீலிக்க வேண்டியதாக இருந்தாலும், இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்கிற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு பொறியாளரின் பணி கட்டடம் கட்டுதல் புதிய கட்டுமானங்களை உருவாக்குதல் ஆகியவற்றுடன் முடிந்துவிடுகிறதா? என்று கேட்டால் அதற்கு நிச்சயம் இல்லையென்றுதான் பதிலளிக்க முடியும்.

பொறியாளர்கள் தினம்
ஏன் எனில் ஒரு பொறியாளர் புதிய கட்டமைப்பை உருவாக்குவதுடன் ஒருபோதும் நின்றுவிடக்கூடாது, அதனை மேலும் செழுமைப்படுத்தி மக்களுக்கு அதன் முழு பலனையும் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அந்த வகையில் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் நலனுக்காகவே பணியாற்றி உயிர்நீத்த மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்.15ம் தேதியான இன்று பொறியாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கல்வி
இந்தியா மட்டுமல்ல இலங்கை மற்றும் தான்சியா ஆகிய நாடுகளும் இத்தினத்தை இதே நாளில் கடைப்பிடித்து வருகிறது. கர்நாடகாவின் முட்டனஹள்ளி கிராமத்தில் 1861ல் இதே நாளில்தான் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். பிஏ படிக்க மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவர், என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ? திடீரென புனேவில் உள்ள அறிவியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்க புறப்பட்டுவிட்டார். இந்த முடிவுதான் அவரை நாட்டின் தலைசிறந்த பொறியாளராக உயர்த்தியது.

தனித்துவமான பாசன திட்டம்
தொடக்கத்தில் மும்பையின் செயற்பொறியாளராக இருந்து பணியாற்றிய அவர், பின்னர் இந்திய பாசன ஆணையத்தில் சேர்ந்தார். அப்போது தக்காணப் பீடபூமியில் அவர் உருவாக்கிய தனித்துவமான பாசன திட்டமுறை இவருக்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இதனையடுத்து உயர்நிலை பொறியாளராக உயர்ந்தார். பின்னர் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு அதனை இந்தியாவில் செயல்படுத்தினார்.

பிளாக் சிஸ்டம்
இதனையடுத்து 1903ல் அவர் உருவாக்கிய கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரையும் பாதுகாத்தது. அதாவது அவர் 'பிளாக் சிஸ்டம்' என்கிற கண்டுபிடிப்பை உருவாக்கினார். இது அணையில் உள்ள நீர்மட்ட அளவை தொடர்ந்து கண்காணித்து நீர் மட்டம் உயரும்போது வெள்ள அபாய எச்சரிக்கையை கொடுக்கும். இது முதலில் புனேவிற்கு அருகிலுள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தப்பட்டது.

புதிய கட்டமைப்புகள்
பின்னர் குவாலியரின் டைக்ரா அணை, மைசூரின் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகிய அணைகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதில் இந்த கிருஷ்ணராஜ சாகர் அணையானது விஸ்வேஸ்வரய்யாவின் திட்டவரைவாலும், மேற்பார்வையிலும் உருவாக்கப்பட்டது. இந்த அணை கர்நாடக மாநிலத்தில் வேளாண்மை மற்றும் நீர் பாசனத்தில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து காக்கும் கட்டுமான வடிவமைப்பையும், ஹைதராபாத் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய கட்டமைப்பையும் உருவாக்கினார்.

பொறியாளர்கள் தினம்
இதனைத் தொடர்ந்து மைசூரின் கட்டுமானத்திற்கு அளப்பரிய பங்களித்துள்ளார். மேலும் "இந்தியாவை மறுகட்டமைத்தல்" மற்றும் "இந்தியாவின் திட்டமிடப்பட்ட பொருளாதாரம்" ஆகிய புத்தகங்களையும் வெளியிட்டார். இவர் இந்திய பொருளாதாரத் திட்டமிடலின் முன்னோடி என்றும் அழைக்கப்பட்டார். இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய அவருக்கு 1955ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து 1962ல் அவர் உயிரிழந்தார். இவரின் நினைவாகதான் இன்று பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications