யோகி அல்ல.. ஆயிரம் மோடி வந்தாலும்.. கர்நாடகாவில் எதுவும் பலிக்காது.. குமாரசாமி அதிரடி!
பெங்களூரு: கர்நாடகாவில் கலவரம் கட்டுக்குள் வரவில்லை என்றால் யோகியின் மாடலை கையில் எடுக்க வேண்டி வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதற்கு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சுல்லியா, கடபா மற்றும் புத்தூர் தாலுக்காக்களில் விஷ்வ இந்து பரிஷத் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

கலவரம்
அதேபோல் பிரவீன் நெட்டாரு-க்கு பாஜக தலைவர் நலின் கடீல் மற்றும் மாநில அமைச்சர் சுனில் குமார் இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது, காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தி காரை கவிழ்க்க முயன்றனர்.

இருவர் கைது
இதனால் தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாக மாறியது. இதற்கிடையே சிக்மங்களுரூ பகுதியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் உயிரைக் காக்க கட்சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜினாமா செய்துள்ளார். பிரவீன் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

யோகி மாடல்
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பிரவீன் கொலை தொடர்பாக அரசு 24 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இதுபோன்ற நிலை கர்நாடகாவில் நீடித்தால், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாடலை கையில் எடுக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

குமாரசாமி பதிலடி
இந்த நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், கர்நாடகாவில் பாஜக கட்சி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கு ஒருபோது யோகியின் மாடல் வேலை செய்யாது. ஏன், ஆயிரம் மோடி வந்தாலும், மாநிலத்தில் எதுவும் பலிக்காது.
யோகியின் மாடல் என்று கூறப்படும் புல்டோசர் அரசியலை பாஜக கர்நாடகாவுக்குள் கொண்டு வந்தால், அக்கட்சி மாநிலத்தில் இருந்து வேரோடு தகர்த்து எறியப்படும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications