ஒரு வாக்குறுதி.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் செய்த பெரிய தவறு.. மொத்தமாக ஓட்டு அள்ளிய பாஜக
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில், மத ரீதியாக அதிக பதற்றம் நிறைந்த கடலோர கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் மிகவும் குறைவான இடங்களில் வெல்லும் எனவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்பேரில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கின.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இதில் தனித்து போட்டியிட்டன. பாஜகவை பொறுத்தவரை ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தேர்தலில் பணியாற்றியது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் அறிக்கை போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்றின.
தேர்தல் முன்பாக பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்ற் தெரிவித்தன. சில ஊடகங்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்பதும், மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு பெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்து இருக்கிறது. 5 மணி நிலவரப்படி 65.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று பதிவான 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பை பொறுத்தவரை கடலோர கர்நாடகாவை பொறுத்தவரை 16 இடங்களில் பாஜகவும் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா டுடே கருத்துக்கணிப்பை பொறுத்தவரை, பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் வெல்லும் எனவும் கூறப்பட்டு உள்ளது. ராஜ்நீதி கருத்துக்கணிப்பை எடுத்துக்கொண்டால் 13 இடங்களில் பாஜகவும், 6 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், போல் போல்ஸ் கருத்துக்கணிப்பில் 14 இடங்களில் பாஜகவும், 4 காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெறும் எனவும் தெரிவித்து உள்ளன.
கடலோர கர்நாடகா மண்டலத்தை பொறுத்தவரை எப்போதுமே மதிரீதியாக பதற்றமான பகுதியாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் ஏற்படும் மத அடிப்படையிலான பிரச்சனைகள் கடலோர கர்நாடகாவில் இருந்தே பூதாகரம் எடுத்து வருகின்றன. பாஜகவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக பார்க்கப்படும் இங்கு, காங்கிரஸின் பஜ்ரங்தள் தடை வாக்குறுதி, அக்கட்சிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது.
இதன் காரணமாக கடலோர கர்நாடக மண்டலத்தில் இந்துக்கள் ஓட்டுக்கள் மொத்தமாக பாஜகவுக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதையே தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்புகள் ஒருசேர காட்டுவதாக கர்நாடக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications