தங்க கடத்தல் நடிகை ரன்யாவுக்கு 12 ஏக்கர் அரசு நிலம்-வாரி தந்த முந்தைய கர்நாடகா பாஜக அரசு- ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் தங்கக் கடத்தல் ராணியாக வலம் வந்த தமிழ் நடிகை ரன்யா ராவ்-க்கு அம்மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு 12 ஏக்கர் அரசு நிலத்தை அள்ளித் தந்ததாக கர்நாடகா தொழில் மேம்பாட்டு அமைப்பான KIADB பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநில பாஜக தலைவர்களோ, கடத்தல் ராணி ரன்யா ராவுக்கும் தற்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர்களுக்கும்தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என பகீர் குண்டை போட கர்நாடகா அரசியல் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
வாகா தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ரன்யா ராவ். தற்போது கர்நாடகாவை அதிரவைக்கும் தங்க கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநில காவல்துறை உயர் அதிகாரியின் வளர்ப்பு மகளான ரன்யா ராவ், துபாயில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வருவதை தொழிலாக வைத்திருந்துள்ளார். கடந்த 15 மாதங்களில் 48 முறை துபாய்க்கு சென்று திரும்பி இருக்கிறார் ரன்யா ராவ்.

அண்மையில் துபாயில் இருந்து திரும்பிய போது நடத்தப்பட்ட சோதனையில் கடத்தலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையில் 12 கிலோ தங்க கட்டிகளை தொடையில் கட்டி கட்டி கடத்தி வந்த போது கையும் களவுமாக சிக்கினார் நடிகை ரன்யா ராவ். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரன்யா ராவிடம் அவருக்கு பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் ரன்யா ராவ் விவகாரம் கர்நாடகா அரசியலை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகா அரசின் தொழில் மேம்பாட்டு அமைப்பான KIADB இன்று வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் ரன்யா ராவின் ஸ்டீல் தொழிற்சாலைக்கு 12 ஏக்கர் அர்சு நிலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு ரன்யா ராவுக்கு இந்த நிலத்தை முந்தைய பாஜக அரசு ஒதுக்கி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் இந்த நிலம், ரன்யா ராவுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனை முன்வைத்து, கர்நாடகா மாநில் பாஜக தலைவர்களுக்குதான் கடத்தல் ராணி ரன்யா ராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. ஆனால் பாஜக தலைவர்களோ, ரன்யா ராவுக்கு பின்னணியில் இருப்பதே தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சர்கள்தான்; இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், ஆண்ட பாஜக இரு கட்சிகளும் ரன்யா ராவுக்கு எந்த கட்சி நெருக்கம் என விவாதம் நடத்துவதால் அம்மாநில அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications