127 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.. வசமாக சிக்கிய நடிகை ரன்யா ராவ்! ரூ.102 கோடி அபராதம் விதிப்பு
பெங்களூர்: Actor Ranya Rao Gold Smuggling Case: துபாயில் இருந்து சட்ட விரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் கைதாகி பெங்களூர் பரப்பன அஹ்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருவாய் புலனாய்வு துறை இயக்குநரகம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான ரன்யா ராவ் சிக்கினார். வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால், கடந்த மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கர்நாடக டிஜிபியின் மகள்
ரன்யா ராவ் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டிருந்த ரன்யா ராவ், கர்நாடக மாநில டி.ஜி.பி. ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார்.
தங்கம் கடத்தியதால் பிடிபட்ட நடிகை ரன்யா ராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது குறுகிய நாட்களில் 10-க்கும் மேற்பட்ட முறை அவர் துபாய் சென்று வந்ததும், அங்கிருந்து வரும்போதெல்லாம் அவர் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
ஜாமீனில் வெளிவர முடியாதவாறு
அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 2.67 கோடி ரொக்கப்பணம் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் விசாரணையில் அவர் 46 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததும், இதில் 27 முறை துபாய்க்கு சென்று தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் மீது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (COFEPOSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுபவர்களை தடுப்பு காவலில் வைக்க முடியும். அதன்படி நடிகை ரன்யா ராவ் ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வர முடியாதவாறு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்
இந்த வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் கொண்டூரு ராஜூ, தொழில் அதிபர் சாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கம் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய அமலாக்கத்துறை, ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துகளை முடங்கியது. விக்டோரியா லேஅவுட்டில் உள்ள வீடு, அர்காவதி லேஅவுட்டில் உள்ள நிலம், தும்கூரில் ஒரு தொழில்துறை நிலம் மற்றும் ஆனேகலில் உள்ள விவசாய நிலம் உள்ளிட்ட ரன்யா ராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.102 கோடி அபராதம்
ரன்யா ராவிற்கு எதிராக அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் நிலையில், சட்டவிரோத தங்கம் கடத்தல் வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் 127.3 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ரன்யா ராவிற்கு ரூ.102.55 கோடி அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நோட்டீசும் அனுப்பி உள்ளது. அது மட்டும் இன்றி இந்த வழக்கில் தொடர்புடைய 72.6 கிலோ தங்கம் கடத்தியதாக தருண் கொண்டூரு ராஜுவுக்கு ரூ.62 கோடியும், 63.61 கிலோ தங்கம் கடத்தியதாக சாகில் ஜெயின், பரத் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.53 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை உரிய கால அவகாசத்திற்குள் செலுத்த தவறினால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் வருவாய் புலனாய்வு துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications