பெங்களூரின் பிரபல உணவக கழிப்பறை குப்பை தொட்டியில் “ரகசிய கேமரா”.. அதிர்ந்த இளம்பெண்.. ஷாக் சம்பவம்!
பெங்களூர்: பெங்களூரில் செயல்படும் பிரபலமான காபி ஷாப் ஒன்றின் கழிப்பறையில், குப்பைத்தொட்டியில் ஸ்மார்ட் போன் மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் இதனை கண்டறிந்த நிலையில், அந்த செல்போனுக்கு சொந்தமான காபி ஷாப் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.டி நிறுவனங்களின் புகலிடமாக இருக்கும் பெங்களூரில் நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளிலும் இருந்து வந்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஐ.டி இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பெங்களூரில் ஏராளமான காபி ஷாப்கள் செயல்பட்டு வருகின்றன.

தேர்டு வேவ் காபி என்பது பிரபலமான காபி ஷாப் செயின். இந்த நிறுவனம் பல இடங்களில் பெங்களுரில் காபி ஷாப்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று காலை, BEL ரோடு பகுதியில் உள்ள தேர்டு வேவ் காஃபி ஷாப் ஒன்றின் கழிப்பறையில் ரகசிய கேமரா ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார் இளம்பெண் ஒருவர்.
தேர்டு வேவ் காபி ஷாப்பின் கழிப்பறையில் இருந்த குப்பைத் தொட்டியில் ஒரு ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருந்துள்ளது. அதன் கேமரா, டாய்லட் சீட்டை படம் பிடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்துள்ளது. கழிப்பறைக்குச் சென்ற பெண் ஒருவர், குப்பைத் தொட்டியில் இருந்த ஒரு துளையில் கேமரா போன்ற பகுதி தெரிவதைப் பார்த்துள்ளார்.
சந்தேகமடைந்த அவர் அதனை சோதனை செய்ததில், டஸ்ட் பின் துளை வழியாக கேமரா தெரியும் வகையில் உள்ளே ஒரு ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருந்துள்ளது. அதுவும் கேமரா பதிவு செய்யும் கோணத்தில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார்.
அவர் போனை எடுத்துப் பார்த்ததில் அந்த போன், ஃப்ளைட் மோடில் இருந்துள்ளது. சத்தம் வரக்கூடாது என்பதற்காக ஃப்ளைட் மோடில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து, அவர் அதிர்ச்சி அடைந்து, காபி ஷாப் நிர்வாகத்தில் முறையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த செல்போனுக்கு சொந்தக்காரரான காபி ஷாப் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த செல்போனில் சுமார் இரண்டு மணி நேரம் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த செல்போனை கழிப்பறையில் வைத்த நபர் குறித்தும், இதுபோன்று ஏற்கனவே நடந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா சார்ந்த இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தும் நபர், தான் இன்று காலை நேரில் கண்ட இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதோடு, மற்றவர்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இனிமேல் எந்த நிறுவனத்திலும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
பிரபலமான காபி ஷாப்பின் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து பலரும் கவலையோடு விவாதித்து வருகின்றனர்.
"எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம். இன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதில் சகிப்புத்தன்மைக்கே இடமில்லை. அவருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்.” என தேர்வு வேவ் காபி செய்ன் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications