சட்டசபைக்கு நான் ஹிஜாப் அணிந்து வருவேன் - முடிந்தால் என்னை தடுங்கள் - சவால் விடும் காங்கிரஸ் எம்எல்ஏ
பெங்களூர்: தைரியம் இருந்தால் சட்டசபையில் ஹிஜாப் அணிந்து வரும் தன்னைத் தடுத்து பார்க்கட்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ சவால் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை கல்லூரி நிர்வாகம்.
கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு, உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரிகளில் இயங்கி வரும் இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காவி துண்டு அணிந்து வந்தனர்.

ஹிஜாப்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ அமைப்பான ஏபிவிபி இயக்கத்தினர் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது, இல்லையென்றால் நாங்களும் இப்படித்தான் கல்லூரிக்கு வருவோம் என்றனர். இதையடுத்து இதேபோன்ற சம்பவம் சிக்மங்களூர் கல்லூரியிலும் தற்போது நடந்துள்ளது.

மாணவிகள்
உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததால், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதியில் இருந்து இவர்கள் "ஆப்சென்ட்" என்று வகுப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடு இன்னும் சில பியூ கல்லூரிகளிலும் போடப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

எதிர்ப்பு
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வாசலிலேயே தடுத்து நிறுத்தியது. ''சார் எங்களை உள்ளே விடுங்க.. எங்க படிப்பு கெடுது..'' என்று மாணவிகள் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ
இந்நிலையில்தான் ஹிஜாப் சர்ச்சை குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனீஸ் பாத்திமா கருத்து தெரிவித்துள்ளார். =அவர் கூறுகையில், ''சீருடையுடன் பொருந்துவதற்காக ஹிஜாபின் நிறத்தில் மாற்றங்கள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் எங்களால் அதை விட்டுவிட முடியாது. சட்டசபைக்கும் நான் ஹிஜாப் அணிந்து தான் செல்கிறேன், அவர்களால் முடிந்தால் என்னை தடுத்துப் பார்க்கட்டும். தேர்வுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இதுவரை அனைவரும் இதை அணிந்திருந்தார்கள். ஏன் திடீரென்று எங்களைத் தடுக்கிறார்கள். புர்கா ஒன்றும் புதிதல்ல. முதல்வர் இதற்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications