கடை பெங்களூரில் இருக்கு.. ஆனா ஏன் "ராமேஸ்வரம்" கஃபேனு பெயர்..குண்டுவெடிப்பு நடந்த இடம்! இது தெரியுமா
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த ராமேஸ்வரம் கஃபே குறித்த சில பின்னணி தகவல்களை நாம் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று திடீரென எதிர்பாராத விதமாகக் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த ராமேஸ்வரம் கஃபேவின் வரலாறு, அதன் பிஸ்னஸ் குறித்து தெரிந்து கொள்ளப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே ராமேஸ்வரம் கஃபேவின் சிஇஓ திவ்யா ராகவேந்திர ராவ் முன்பு மை ஜார்- க்கு அளித்த பேட்டியில் ராமேஸ்வரம் கஃபே குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
ராமேஸ்வரம் கஃபே: ராமேஸ்வரம் கஃபேவை திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோர் இணைந்து கடந்த 2021இல் தொடங்கினார்கள். ராமேஸ்வரம் கஃபே டேஸ்ட் அட்டகாசமாக இருந்ததால் அது பெங்களூரில் உடனடியாக ஹிட் அடித்தது. இதனால் அவர்கள் மெல்ல தங்கள் கிளைகளை விரிவுபடுத்தினர். இப்போது அவர்களுக்கு 4 கிளைகள் உள்ளது.
அதன் சிஇஓவாக திவ்யா ராகவேந்திர ராவ் இருக்கிறார். அவர் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பைனாஸ் மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அவர் ஐசிஏஐ அமைப்பின் தென்னிந்தியப் பிராந்திய கவுன்சிலின் பெங்களூர் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அவர் உணவுத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ராகவேந்திர ராவை சேஷாத்ரிபுரத்தில் ஒரு எளிய உணவகத்தில் சந்தித்தார். இருவரும் இணைந்து தான் ராமேஸ்வரம் கஃபேவை தொடங்கியுள்ளனர்.
பெயர்க் காரணம்: அது சரி பெங்களூரில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு எதற்காக ராமேஸ்வரம் என்று பெயர் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்த இடத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இந்த பெயரை அவர்கள் வைத்துள்ளனர்.
இந்த தேர்வின் காரணத்தை விளக்கிய அவர், "எனக்கு டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் பிறந்த இடம் ராமேஸ்வரம் என்பதால் இந்த முடிவை எடுத்தோம். அவருக்காக இந்த பிராண்டை அர்ப்பணித்துள்ளோம். மற்றொரு காரணம், நாங்கள் சுத்தமான சைவ, உண்மையான தென்னிந்திய உணவுகளைத் தருகிறோம். வரும் காலத்தில் சர்வதேச அளவில் உணவகத்தைக் கொண்டு செல்ல விரும்புகிறோம். அப்போது ராமேஸ்வரம் என்றால் வெளிநாட்டவரால் எளிதாக அது தென்னிந்திய உணவு எனப் புரிந்து கொள்ள முடியும்" என்றார்.
டேஸ்ட்: இவர்கள் தங்கள் உணவகத்தின் டேஸ்டை உறுதி செய்யப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். உதாரணமாக அனைத்து கடைகளிலும் பேக்கிங் சோடா பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டால்டாவை தவிர்த்துவிட்டு, தூய நெய்யைத் தான் பயன்படுத்துகிறார்கள். மேலும், செயற்கை கலர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராமேஸ்வரம் கஃபேவில் பிரிட்ஜ் இருக்காது என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். ஏனென்றால் பிரிட்ஜில் வைத்து உணவைக் கொடுத்தால் அது டேஸ்டை பாதிக்கும் என்பதால் எப்போதும் புதியதாக தயார் செய்யப்பட்ட மாவு மற்றும் சட்னிகள் தான் வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும். இந்த கஃபேவை திறக்கும் முன்பு திவ்யா தனது ஊழியர்களுக்குக் கடுமையான பயிற்சிகளையும் தந்திருந்தார்.












Click it and Unblock the Notifications