சிஎம் பதவி வேணுமா? 2500 கோடி கொடுத்தால் சீட்டில் உட்காரலாம்! கர்நாடகாவில் அதிரடி ஆஃபர்.. பகீர் தகவல்
பெங்களூர்: ‛‛கர்நாடக முதல்வராக வேண்டுமானால் ரூ.2,500 கோடி கொடுங்க'' என தன்னிடம் ஒருவர் கேட்டதாக அம்மாநில மூத்த பாஜக தலைவரும், எம்எல்ஏவுமான பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கர்நாடகத்தில் பாஜகவில் முதல்வர் பதவிக்கு ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். கட்சியின் மூத்த தலைவராகவும், விஜயாப்புரா நகர் சட்டசபை தொகுதி எம்எம்ஏவுமாகவும் இருப்பவர் பசனகவுடா பட்டீல் யத்னால்.
இவர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அமைச்சர் பதவியை பிடிக்க அவர் டெல்லி சென்று சில தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவருக்கு நேரம் கூடி வரவில்லை.

திருடர்கள் அதிகம்
இந்நிலையில் தான் அவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் பசனகவுடா பட்டீல் தொண்டர்களை நோக்கி கூறியதாவது: அரசியலில் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தேர்தலில் போட்டியிட சீட் மற்றும் பதவிகள் வாங்கி தருவதாக கூறும் திருடர்கள் அதிகமாக உள்ளனர்.

முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி
சோனியாகாந்தி(காங்கிரஸ் தலைவர்), ஜேபி நட்டாவை(பாஜக தலைவர்) சந்திக்க வைப்பதாக கூறுவதை ஒருபோதும் நம்பாதீர்கள். நானும் இந்த சூழலை அனுபவித்து உள்ளேன். ரூ.2,500 கோடி கொடுத்தால் முதல்வராக்குவதாக ஒருவர் கூறினார். ரூ.2,500 கோடி என்றால் என்ன என்று நினைக்கிறாய்? என மனதுக்குள் நினைத்து கொண்டேன். அதேநேரத்தில் இந்த பணத்தை எங்கு வைப்பார்கள்? என யோசித்தேன். இவ்வாறு அவர்கள் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதை ஒருபோதும் நம்பிவிடக்கூடாது'' என பேசினார்.

முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடியா?
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கர்நாடகத்தில் பாஜக சார்பில் முதல்வராக வேண்டும் என்றால் ரூ.2,500 கோடி கொடுக்க வேண்டும் போல என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛ரூ.2,500 கோடி கேட்டதாக பசனகவுடா பட்டீல் யத்னால் கூறியிருப்பது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்'' எனகூறியுள்ளார்.

யார் இந்த எம்எல்ஏ?
பசனகவுடா பட்டீல் யத்னால் கர்நாடக பாஜகவில் மூத்த தலைவராக உள்ளார். சர்ச்சைக்கு மிகவும் பெயர் பெற்றவர். கட்சி மேலிடம் மற்றும் மாநில பாஜக ஆட்சிக்கு எதிராகவும் அவ்வப்போது கருத்து தெரிவிப்பார். இதனால் தான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற பேச்சும் உண்டு. முன்னதாக இவர் 2002 முதல் 2003 வரை எம்பியாக இருந்தபோது மத்திய இணையமைச்சராகவும் செயல்பட்டார். தற்போது விஜயாப்புரா டவுன் சட்டபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications