ஜாக்கிங் சென்ற உளவுத்துறை முன்னாள் அதிகாரி.. வேகமாக மோதிய மர்ம கார்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மைசூரில் 82 வயதான உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஆர்.என்.குல்கர்னி கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் இது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளனர்.
குல்கர்னி வழக்கமாக காலை வாக்கிங் சென்றுகொண்டிருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறை அதிகாரி
கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருபவர் ஆர்.என்.குல்கர்னி. 82 வயதான இவர் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாவார். இந்நிலையில் நேற்று முன்தினம் (நவ.4) அதிகாலை மைசூர் பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அன்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மறுபுறம் பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டது. பின்னர்தான் அது ஆர்.என்.குல்கர்னி என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கவனக்குறைவாக ஓடிய வாகனம் ஒன்று இடித்ததில் இவர் குல்கர்னி உயிரிழந்துள்ளதாக வி.வி.புரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்து
ஆனால் இது குறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, குல்கர்னி வழக்கமாக பல்கலைக்கழக வளாகத்தில் பிரதான சாலையில் நடப்பது கிடையாது. உட்புற குறுகிய சாலையில்தான் நடை பயிற்சி மேற்கொள்வார். இவ்வாறு இருக்கையில், இந்த குறுகிய சாலைக்குள் எந்த வாகனம் வந்திருக்கும் என்று காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று குல்கர்னியை மோதி விட்டு வேகமாக செல்வது தெரிந்துள்ளது.

கொலை
இதனையடுத்து இந்த வழக்கை காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இது குறித்து கமிஷ்னர் குப்தா கூறுகையில், முதலில் நாங்கள் இதனை சதாரன விபத்து என்றுதான் நினைத்தோம் ஆனால், விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார். விபத்து நடந்த கடந்த 4ம் தேதியன்று சம்பவம் நடந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் விசாரிக்கையில் கார் ஒன்று வேகமாக ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திரா பொறியியல் கல்லூரியை நோக்கி சென்றுள்ளது என்று கூறியுள்ளனர்.

யார் இந்த ஆர்.என்.குல்கர்னி
விபத்தை ஏற்படுத்திய காரும், ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திரா பொறியியல் கல்லூரியை நோக்கி சென்ற காரும் ஒன்றுதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.என்.குல்கர்னி, 1940ம் ஆண்டு ஹாவேரி மாவட்டம் சவனூரில் பிறந்துள்ளார். பின்னர் தார்வாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் 1963ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உளவுத் துறையில் பணியாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications