ஆர்சிபி தோல்விக்கு மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் மனைவி தான் காரணமா? பெங்களூர் கமிஷனரிடம் புகார்
பெங்களூர்: ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் ஆர்சிபி தோல்விக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ராஜ்குமார் தான் முக்கிய காரணம். கணவரை இழந்த அவர் ஆர்சிபி அணியின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தான் தோல்வி வருகிறது என அவதூறாக பதிவிட்ட நபர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. மார்ச் 22ம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையிடம், ஆர்சிபி தோற்றது. அதன்பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நடந்த 3வது போட்டியில் கொல்கத்தா அணியிடம், கடந்த 2ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக போட்டியிலும் ஆர்சிபி தோற்றுப்போனது. மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி உள்ள ஆர்சிபி அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதன்மூலம் வெறும் 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி 6வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் வெல்லும் முனைப்பில் ஆர்சிபி களமிறங்குகிறது. இருப்பினும் தற்போது வரை ஒருமுறை கூட ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறையாவது ஆர்சிபி சிறப்பாக விளையாடி சாம்பியன் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் தான் தொடக்கத்திலேயே ஆர்சிபி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஆர்சிபி அணியின் தோல்விக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி தான் காரணம் என அவதூறு பரப்பப்பட்டுள்ளது. அதாவது மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளையமகன் புனித் ராஜ்குமார். இவர் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்தார். புனித் ராஜ்குமார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் காலமானார். இந்நிலையில் தான் கஜபடை என்ற பெயரில் உள்ள எக்ஸ் பக்கத்தில் ஆர்சிபி தோல்விக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ராஜ்குமார் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதாவது, ‛சுப நிகழ்ச்சிக்கு சுமங்கலிகள் பங்கேற்க வேண்டும். ‛ஆர்சிபி அன் பாக்ஸ்' நிகழ்ச்சியில் அஸ்வினி புனித் ராஜ்குமாரை அழைத்து வந்ததால் அனைத்து போட்டிகளிலும் ஆர்சிபி அணி தோற்று வருகிறது'' என பதிவிடப்பட்டு இருந்தது. அதாவது இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு ஆர்சிபி அணியின் டீசர்ட் உள்ளிட்டவற்றின் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி பெங்களூரில் நடந்தது. இதில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி பங்கேற்றார். மேலும் அவர் ஆர்சிபி அணியின் டீசர்ட்டை அறிமுகம் செய்து வைத்தார்.

இத்தகைய சூழலில் தான் கணவரை இழந்த அஸ்னிவி புனித் ராஜ்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்றது கெட்ட சகுனமாக உள்ளது. இதனால் தான் ஆர்சிபி தோற்று வருவதாக அந்த எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை செய்தது நடிகர் தர்ஷனின் ரசிகர் என கூறப்படுகிறது. இதனால் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் புனித் ராஜ்குமார்ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் சண்டையிட தொடங்கினர். மேலும் அந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் அந்த பதிவால் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் மிகவும் மனம் உடைந்து போய் உள்ளார். மேலும் தவறான வகையில் விமர்சனம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகாரளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கஜபடை என்ற எக்ஸ் பக்கத்தில் ஆர்சிபி தோல்விக்கு புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ராஜ்குமார் தான் காரணம் என பதிவிட்ட நபர் மீது பெங்களூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications