மகா பிரபு இங்கேயுமா? கர்நாடகா தேர்தலுக்கு தயாராகும் காங்.- ஓட்டுகளை பிரிக்க களமிறங்கும் ஆம் ஆத்மி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க டெல்லியில் கர்நாடகா மூத்த தலைவர்களுடன் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்த உள்ளார். இன்னொரு பக்கம் கர்நாடகாவில் 60 தொகுதிகளில் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் பாஜக வலிமையாக, ஆட்சியில் இருக்கக் கூடிய மாநிலம் கர்நாடகா. அதேநேரத்தில் பாஜகவுக்கு கடும் போட்டியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வலிமையுடன் இருக்கிறது காங்கிரஸ். கர்நாடகாவில் தீர்மானிக்கும் அரசியல் கட்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) உள்ளது.

கர்நாட்கா களம்
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவை 113 இடங்கள். 2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 இடங்களைப் பெற்றன. பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏக்கள் இல்லை. இருந்தபோதும் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். அவரால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் எடியூரப்பா பதவி விலகினார்.

குமாரசாமி ஆட்சி கவிழ்ப்பு
இதனையடுத்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி முதல்வரானார். ஆனால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சியும் ஓராண்டுதான் நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் 13, ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏக்களை இழுத்தது பாஜக. அந்த 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தமது சித்து விளையாட்டை விளையாடியது பாஜக. இந்த விளையாட்டுக்குதான் ஆபரேஷன் லோட்டஸ் என பெயர் வைத்திருக்கிறது பாஜக. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் எடியூரப்பா மீண்டும்
முதல்வரானார்.

எடியூரப்பாவுக்கு ஆப்பு
கர்நாடகா முதல்வராக எடியூரப்பா 2 ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் கடந்த ஆண்டு அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். எடியூரப்பாவுக்கு 78 வயதானதால் அதனை காரணம் காட்டி அவர் பதவி விலக வைக்கப்பட்டார். பாஜகவில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுத்து விஸ்வரூபம் அடைந்ததும் ஒரு காரணம். இப்போது பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார்.

கர்நாடகாவில் விரைவில் தேர்தல்
இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும் எப்படியாவது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டும் என காங்கிரஸும் தீவிரம் காட்டுகின்றன. குஜராத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. அதேநேரத்தில் இமாச்சலலில் காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது; டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மியிடம் அதிகாரத்தை இழந்தது பாஜக. இதனால் கர்நாடகா தேர்தலில் மீண்டும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை
அதேநிலைமைதான் காங்கிரஸுக்கும். கர்நாடகாவில் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு உள்ளது. அதுவும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக கர்நாடகாவின் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற நிலையில் நடைபெறும் தேர்தல். அதனால் கர்நாடகா தேர்தலில் அவர் தீவிர கவனம் செலுத்தவும் தொடங்கி உள்ளார். டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கர்நாடகா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் கார்கே இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடகா தேர்தல் வியூகம் குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது.

ஜேடிஎஸ் மும்முரம்
பாஜக, காங்கிரஸ் கட்சியைப் போல ஜேடிஎஸ்-ம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஜேடிஎஸ் கட்சியின் பிரதான வாக்கு வங்கியாக இருப்பது ஒக்கலிகா கவுடா வாக்குகள். ஆனால் இந்த செல்வாக்கை காங்கிரஸ் சரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதில் ஜேடிஎஸ் கவனம் செலுத்தி வருகிறது.

ஆம் ஆத்மி போட்டி
இத்தனை கட்சிகளுக்கு மத்தியில் ஆம் ஆத்மியும் 60 தொகுதிகளில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை தீவிரமாக எதிர்ப்பதாக பிரசாரம் செய்கிறது. ஆனால் ஆம் ஆத்மி போட்டியிடும் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உதவும் வகையில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகளை சிதறடிக்கவும் செய்கிறது. இதனால் கர்நாடகாவில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்கிற அறிவிப்பும் கவனத்தைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications