பரிதாப நிலையில் பாஜக! கர்நாடகாவில் 31 தொகுதியில் ‛டெபாசிட்’ காலி! அமைச்சருக்கே இந்த நிலையா? லிஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் மொத்தம் 31 தொகுதிகளில் அமைச்சர் முதல் பாஜக நிர்வாகிகள் டெபாசிட்டை இழந்துள்ள பரிதாப தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. மொத்தம் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ன நிலையில் 113 இடங்களில் வென்றால் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தனித்து ஆட்சியை அமைக்கிறது.
காங்கிரஸ் சார்பில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை மறுநாள் பெங்களூரில் நடக்கும் விழாவில் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையே தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் ரிசல்ட் தொடர்பாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் 31 தொகுதிகளில் பாஜக மிகவும் பரிதாபமான நிலையில் தோற்றுள்ளது. அதாவது அந்த தொகுதிகளில் டெபாசிட்டை கூட பாஜக பெறவில்லை. இதில் பசவராஜ் பொம்மை அரசில் அமைச்சராக இருந்த அசோக் உள்பட 31 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை கூட பெறாமல் படுதோல்வியடைந்துள்ளனர்.
அதன்படி மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜநகர், உன்சூர், பிரியப்பட்டணா, டி நரசிப்புரா, ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா சரவணபெலகொலா, அரிசிக்கெரே, அரக்கல்கூடு, கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர், மண்டியா மாவட்டம் மேலக்கோட்டை, மலவள்ளி, நாகமங்களா, மத்தூர், துமகூரு மாவட்டம் பாவகடா, மதுகிரி, கொரட்டகெரே ஆகிய தொகுதிகளில் பாஜக டெபாசிட்டை இழந்துள்ளது.
மேலும் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர், சிட்லகட்டா, சிந்தாமணி, கோலார் மாவட்டம் முல்பாகல், பங்காருபேட்டை, ராம்நகர், ராம்நகர் மாவட்டம் மாகடி, கனகபுரா ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இந்த மாவட்டங்கள் தான் ஓல்டு மைசூர் மாவட்டங்களாக உள்ளன. இது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். இங்கு தான் பாஜக அதிக இடங்களை வெல்ல வேண்டும் என முனைப்பு காட்டியது. ஆனால் இந்த மாவட்டங்களில் மட்டும் 24 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.

இதுதவிர தாவணகெரே மாவட்டம் சன்னகிரி, சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி, பெங்களூரில் புலிகேசிநகர்,
பல்லாரி மாவட்டம் ஹகரிபொம்மனஹள்ளி, யாதகிரி மாவட்டம் குர்மித்கல், பீதர் ஆகிய தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். இந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜநகர் தொகுதியில் 1.24 சதவீத ஓட்டையும், அதிகபட்சமாக மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் 15.84 சதவீத ஓட்டுகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் பாஜகவுக்கு டெபாசிட் காலியான இந்த தொகுதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது கனகபுரா தொகுதியாகும். இது ராம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கனகபுரா தொகுதி கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் கோட்டையாகும். 3 முறை வெற்றி பெற்ற நிலையில் 4 முறையாக களமிறங்கினார்.அவரை வீழ்த்த வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அசோக்கை பாஜக களமிறக்கியது.
இந்நிலையில் தான் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமார் 1 லட்சத்து 43 ஆயிரத்து 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ஜேடிஎஸ் கட்சியின் நாகராஜூ 20,631 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இதனால் 1 லட்சத்து 22 ஆயிரத்து 392 ஓட்டுகள் வித்தியாசத்தில் டிகே சிவக்குமார் அமோக வெற்றி பெற்றார். பாஜகவின் ஆர் அசோக் 19,753 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் டிகே சிவக்குமாரை எதிர்த்த அமைச்சர் ஆர் அசோக் உள்பட போட்டியிட்ட அனைவருக்கும் டெபாசிட் போனது. இருப்பினும் அசோக் பெங்களூர் பத்மநாபநகரில் போட்டியிட்ட நிலையில் அங்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications