கர்நாடக தேர்தல்: அமித்ஷா அவ்ளோ சொல்லியும் கேட்கலயே.. ஜெகதீஷ் ஷெட்டர் குறித்து ஓபனாக பேசிய எடியூரப்பா
பெங்களூர்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து உப்பள்ளி-தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், ஜெகதீஷ் ஷெட்டரை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

பாஜகவை பொறுத்தவரை அக்கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே தென்மாநிலம் கர்நாடக மாநிலம் தான். இதனால், இங்கு வெற்றி பெற்று ஆட்சி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
அதேபோல், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இங்கு வெற்றியை ருசிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ஜேடிஎஸ் கட்சியும் கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளது. கர்நாடகவை பொறுத்தவரை 224- தொகுதிகள் உள்ளன. இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்த மேஜிக் எண்ணை பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் , பாஜக ஆகிய கட்சிகள் குறியாக உள்ளன. இதனால், வேட்பாளர் தேர்விலும் பாஜக மிகுந்த கவனம் காட்டியது. 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. குறிப்பாக கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால், கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவருக்கு உப்பள்ளி-தார்வாட் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்து. பாஜகவில் இருந்து விலகி சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த வேண்டும் என்று பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில், பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டரை ஷீட்டர் (ஏமாற்றுக்காரர்) என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார். எடியூரப்பா கூறுகையில், "ஜெகதீஷ் ஷெட்டர் ஒரு ஏமாற்றுக்காரர். ஜெகதீஷ் ஷெட்டரின் மனைவிக்கு டிக்கெட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அமித்ஷா தனிப்பட்ட முறையில் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பேசி டெல்லி வாருங்கள்.. மாநிலங்களவை உறுப்பினர் தருகிறோம்.. மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர் இதை ஏற்க மறுத்தார். அதற்கான பலனை ஷெட்டர் அனுபவிப்பார். ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். கர்நாடகாவில் பாஜக 125-130 இடங்களில் வெற்றி பெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications