தேர்தலில் ஜெயிக்கணும்.. கர்நாடகா தேரின் காவிக்கொடியை ஏலம் எடுத்த மாஜி அமைச்சர்!இவ்வளவு தொகையா? ஆஹா
பெங்களூர்: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த கர்நாடகா முன்னாள் எம்எல்ஏ டி சுதாகர். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிரியூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ள அவர் தேரின் மீது பொருத்தப்பட்டு இருந்த காவிக்கொடியை மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா நாயக்கனஹட்டி கிராமத்தில் புகழ்பெற்ற திப்பேருத்ரசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சித்ரதுர்கா மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பிற இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.

தேர் திருவிழா
இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கோவிலில் நடந்தது. பல ஆயிரம் மக்கள் திரண்டு வந்து வடம்பிடித்து தேரை இழந்து சென்றனர். வெகுவிமரிசையாக நடந்த இந்த தேரோட்டத்தின்போது ஏராளமான பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த தேரோட்டம் அமைதியாக எந்த பிரச்சனைகள் இன்றியும் முடிந்தது.

ஏலம் விடப்பட்ட பொருட்கள்
இதையடுத்து வழக்கம்போல் தேரில் இருக்கும் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. சாமி பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், தேரில் அலங்காரமாக அணிவிக்கப்பட்ட மாலை உள்ளிட்டவைகளை முந்தைய ஆண்டுகளை போல் இந்த வருடமும் ஏலம் விடப்பட்டது. இந்த பொருட்களை ஏலம் எடுப்பதன் மூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் என மக்கள் நம்புவதால் ஒவ்வொரு முறையும் இந்த ஏலத்தில் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் பங்கேற்பார்கள்.

பெருந்தொகைக்கு ஏலம் எடுத்த நபர்
அந்த வகையில் தேரில் கட்டப்பட்டிருந்த காவிக்கொடியை வாங்க ஏராளமானவர்கள் முன்வந்தனர். இதனால் ஏலம் தொடங்கியவுடன் அனைவரும் ஆர்வமாக ஏலம் கேட்டனர். இதனால் காவிக்கொடியின் விலை என்பது கிடுகிடுவென உயர்ந்து விண்ணை தொட்டது. இறுதியாக காவிக்கொடியை ரூ.55 லட்சத்துக்கு முன்னாள் அமைச்சர் சுதாகர் ஏலம் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார்.

யார் இந்த டி சுதாகர்?
காவிக்கொடியை ஏலம் எடுத்த டி சுதாகர் சித்ரதுர்கா மாவட்ட செல்லக்கேரே தொகுதியில் கடந்த 2004 தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2008, 2013 தேர்தல்களில் ஹிரியூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். இவர் பாஜகவில் பயணித்து வந்த நிலையில் எடியூரப்பாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதன்பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

மீண்டும் போட்டியிட முயற்சி
கடந்த முறை காங்கிரஸ் சார்பில் ஹிரியூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ஹிரியூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட காய்நகர்த்தி வருவதோடு வீடுவீடாக தற்போதே பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் திப்பேருத்ரசாமி கோவில் தேரில் இருந்த காவிக்கொடியை ரூ.55 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications