அடுத்தடுத்து முளைக்கும் சர்ச்சைகள்..! எல்லாத்துக்கும் பொம்மை தான் காரணம்! கடுமையாக சாடிய சித்தரமையா
பெங்களூரு : கர்நாடகவில் ஹிஜாப் சர்ச்சைக்கும் பிறகு தற்போது ஹலால் இறைச்சி , மசுதிகளில் ஒலிப்பெருக்கிக்கு தடை உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணியில் கர்நாடக அரசும், முதல்வர் பசவராஜ் பொம்மையும் இருப்பதாக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தரமையாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் மற்றும் கோவில்கள் அருகே இந்துக்கள் அல்லாத வியாபாரிகள் கடைகள் வைக்க தடை உள்ளிட்ட பிரச்சினைகள் வெடித்தது.
இந்த நிலையில் பாஜக ஆளும் கர்நாடகாவில் தற்போது மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைகள் அடுத்தடுத்து வலது சாரி அமைப்புகளால் கிளப்பப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் சர்ச்சை
அதாவது கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹலால் இறைச்சி பொருட்கள் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியது. கர்நாடகாவில் உள்ள இறைச்சிகடைகளில் விற்பனை செய்யப்பட்டும் ஹலால் இறைச்சி உணவு பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து ஜனஜக்ருதி சமிதி, ஸ்ரீராம சேனே, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

மசூதிகளில் ஒலிப் பெருக்கி
அந்த விவகாரம் சற்றே ஓய்ந்த நிலையில், அடுத்த விவகாரமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது எனவும், அது படிக்கும் மாணவர்களை பாதிப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்வாறு கர்நாடக மாநிலத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது, அடுத்த வருடம் அங்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

பாஜக காரணம்
இந்நிலையில் கர்நாடாகவில் நடக்கும் விவகாரங்களுக்கு பாஜக தான் காரணம் என முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தரமையாக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவாகரம் குறித்து பேசிய அவர், ஹலால் இறைச்சித் தடை மற்றும் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபெருக்கி தடை போன்றவற்றின் பின்னணியில் அரசு மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை இருப்பதாக நேரடியாக குற்றம் சாட்டினார்.

பாஜக மறுப்பு
"ஆர்.எஸ்.எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? இதற்கு பின்னணியில் அரசும், முதல்வரும் உள்ளனர், அவர்களும் இதற்கு துணைபோகின்றனர்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார். ஆனால், ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. மசூதிகளில் சத்தம் எழுப்புவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, "காங்கிரஸ் கபட நாடகம் போடுகிறது. ஹிஜாப் பிரச்சனையின் போது ஏன் மௌனமாக இருந்தார்கள்? அவர்கள்தான் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள். என்றார்.












Click it and Unblock the Notifications