இந்த இரண்டும் இருக்கிறதா.. கேரளாவுக்கு புது ரூல்ஸ் போட்ட கர்நாடகா.. எல்லையில் பரபரப்பு
பெங்களூரு : அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு இப்போது ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் ரிப்போர்ட் கட்டாயமாகும். அத்துடன் இரண்டு டோஸ் பெற்ற கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழும் கட்டாயம் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசின் தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார் பிறப்பித்த உத்தரவில், டெல்டா பிளஸ் மாறுபாடு கேரளாவின் சில மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இதனால் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் சோதனை கட்டாயம் ஆகும். இந்த சோதனை 72 மணி நேரத்திற்குள் எடுத்தாக இருக்க வேண்டும். மேலும் இரண்டு டோஸ் போட்ட தடுப்பூசி சான்றிதழையும் அளிக்க வேண்டும்.

பஸ், ரயில்
கேரளாவில் இருந்த விமானம், பஸ், ரயில், டாக்ஸி மற்றும் தனிப்பட்ட போக்குவரத்து மூலம் கர்நாடகாவுக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தலைமை செயலாளர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கர்நாடகா அரசு
இந்நிலையில் கேரளாவுடன் எல்லையை ஒட்டிய அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக தட்சிணா கன்னடம், குடகு, மைசூரு மற்றும் சாமராஜநகர் ஆகிய மாவட்டங்களில் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு போதுமான பணியாளர்களை சோதனைச் சாவடிகளில் நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது.

உத்தரவு
கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர், உதவியாளர் / துப்புரவாளர் மற்றும் பயணிகள் உட்பட அனைவரையும் சரிபார்க்க அதிகாரிகளுக்கு கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்தில் பயணிப்பவர்களுக்கு, ஆர்டி-பி.சி.ஆர் சான்றிதழ் 72 மணி நேரத்திற்கு மேல் இல்லையா என்பதை பேருந்தின் நடத்துனர் பார்க்க வேண்டும் என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்கள்
இதற்கிடையில், கல்வி, வணிகம் மற்றும் பிற காரணங்களுக்காக கர்நாடகாவுக்கு தினமும் வந்து செல்லும் அனைத்து மாணவர்களும் பொதுமக்களும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தி அதன் நெகட்டிவ் ரிப்போர்ட் வைத்திருப்பதும் கட்டாயம் என்றும் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

கண்காணிப்பு தீவிரம்
இந்த வார தொடக்கத்தில், தட்சிணா கன்னடா மற்றும் குடகு மாவட்ட நிர்வாகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் கேரளாவிலிருந்து வரும் மக்களிடமிருந்து சோதனை சான்றிதழ்கள் கட்டாயமாக சரிபார்க்கப்படும் என்று அறிவித்திருந்தன. கேரளா-கர்நாடக எல்லைகளில் இயங்கும் சோதனைச் சாவடிகளை வலுப்படுத்தவும், அதிக விழிப்புணர்வுடன் இருக்கவும் மாநில அரசு மாவட்டங்களுக்கு அறிவுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

மருத்துவ அவசரம்
இருப்பினும், எம்பி எம்எல்ஏக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் மரணம் மற்றும் மருத்துவத் தேவைகள் போன்ற கடுமையான அவசரகால சூழ்நிலைகளில், பயணிகள் ரிப்போர்ட்டும் இல்லாமல் கூட பயிணிக்க அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் முகவரி விவரங்களை அளிப்பதன் மூலம் கோவிட் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications