மீண்டும் மிரட்டும் கொரோனா.. கர்நாடகாவில் இனி மாஸ்க் கட்டாயம் போடணும்.. யாரெல்லாம் நிச்சயம் போடணும்
பெங்களூர்: கொரோனா பாதிப்பு திடீரென வேகமாகப் பரவி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மாஸ்க் கட்டாயமாக்கப்படும் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளது.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜேஎன் 1 வகை கொரோனா காரணமாகவே உலகில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணியும்படி கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு: மேலும், இருமல், சளி மற்றும் காய்ச்சலின் அறிகுறிகள் உள்ளவர்களும் மாஸ்க் அணியும்படி கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா அதிகரிக்கக் காரணமாக இருக்கும் ஜே.என்.1 வகை கொரோனா கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இந்த எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அறிகுறிகள் உள்ளவர்களிடம் சோதனை நடத்தவும், எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார். இப்போது நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்தவொரு கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் சொல்வது என்ன: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "யாரும் கவலைப்படத் தேவையில்லை, கொரோனா பரவல் குறித்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினோம். டாக்டர் ரவி தலைமையிலான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தேவையான வழிகாட்டுதல்களைக் கொடுத்தார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம் போன்ற நோய்கள் உள்ளவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும். பொதுமக்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்படும்.
மேலும் எங்கள் மருத்துவமனைகளையும் சுகாதார நிலையங்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். கேரளாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் குடகு, தட்சிண கன்னடா, சாமராஜநகரா மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு இருக்கும். வரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை வைத்து என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கும்,
தீவிர பரிசோதனை: எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பரிசோதனையை அதிகரிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம். அறிகுறிகள் உள்ள அனைவரிடமும் கட்டாயமாகச் சோதனை செய்யச் சொல்லியிருக்கிறோம். கொரோனா பாதிப்பு மாநிலத்தில் அதிகரிக்கிறதா இல்லையா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். இப்போது கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை" என்றார்.
பொதுவாக கார்த்திகை மாதம் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்களுக்கு எதாவது தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தினேஷ் குண்டு ராவ், "தற்போது மக்கள் நடமாட்டம் மற்றும் கூடுவதற்குத் தடை எதுவும் இல்லை.. இப்போது மக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம். ஏனென்றால் அத்தகைய சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை.
மாஸ்க் கட்டாயம்: நாங்கள் தினசரி நிலைமையைக் கண்காணிப்போம், ஏதேனும் மோசமான தகவல்கள் கிடைத்தால், அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். தற்போதைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணியுங்கள், அதை நாங்கள் கட்டாயமாக்க உள்ளோம்.
அனைத்து மருத்துவமனைகளிலும் பயிற்சி ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளன. படுக்கைகள், வென்டிலேட்டர்கள்.. அவசரக் காலத்தில் தேவைக்கு ஆக்ஸிஜன் சப்ளை, மாஸ்க், சோதனை கருவிகள் மற்றும் பிபிஇ கிட்கள் இருப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications