கர்நாடகாவில் காங்கிரசுக்கு விழும் அடி.. லோக்சபா தேர்தலில்.. வெளியான கருத்து கணிப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது எனவும், பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிளில் வென்று அசத்தியது.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது. கர்நாடகாவில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அதேபோல் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் தான் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2024 ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் இந்த தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் இன்றைய தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் யார் வெல்வார்கள்? என்று Democracy Times Network சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதாவது பாஜக, ஜேடிஎஸ் கட்சியின் கூட்டணியை விட காங்கிரஸ் கட்சி பின்தங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி 48 சதவீத ஓட்டுகளை பெற்று 16 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டுகள் பெற்று 12 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 26 இடங்களை கைப்பற்றியது. ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வென்றது. இதனை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுக்கு சறுக்கலும், காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியும் கிடைக்கும் என இந்த கருத்து கணிப்பின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேவேளையில் மகளிருக்கு மாதம் ரூ.2,500, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், வீட்டுக்கு 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தற்போது நிறைவேற்றி உள்ளது. இத்தகைய சூழலில் ஜேடிஎஸ், பாஜக கூட்டணி இல்லாமல் இருந்தால் கர்நாடகாவில் காங்கிரசுக்கு இன்னும் கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications