பறவைகளுக்காக.. சொந்த செலவில் 16 குளம்.. பாராட்டிய பிரதமர் மோடியை பாராமலே இறந்த தொழிலாளி.. சோகம்
பெங்களூர்: கர்நாடகாவில் பறவைகளுக்காகவும், இயற்கையை காக்கவும் சொந்த செலவில் 17 குளங்களை உருவாக்கி பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட ஆடு மேய்த்த தொழிலாளியான கல்மனே காமேகவுடா வயது முதிர்வால் மரணமடைந்தார். பிரதமர் மோடியை பார்க்க ஆசைப்பட்ட இவர் அவரை பார்க்காமலே மரணமடைந்துள்ளார்.
இந்தியா முழுவதும் பறவைகளை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பலர் தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் கர்நாடகாவில் ஒற்றை நபராக 84 வயது நிரம்பிய ஒருவர் 16 குளங்களை வெட்டி பறவைகளையும், இயற்கையையும் பாதுகாத்து வந்த நிலையில் வயோதிகத்தால் அவர் மரணடைந்துள்ளார்.

கல்மனே காமேகவுடா
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்மனே காமேகவுடா (வயது 84). இவர் ஆடுகள் வளர்த்து வாழ்க்கை நடத்தினார். இவருக்கு இயற்கை மீது அதீத பாசம் உண்டு. இதனால் தான் இயற்கையை பாதுகாக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். குறிப்பாக தனது சொந்த செலவில் குளங்கள் வெட்ட துவங்கினார்.

சொந்த செலவில் 16 குளங்கள்
அதன்படி மலவள்ளி அருகே குண்டூர் மலைப்பகுதியை சுற்றி சொந்த செலவில் 16 குளங்களை வெட்டினார். அதோடு 1000க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார். இதன்மூலம் பறவைகள், பிற விலங்களின் தாகத்தை தணித்த அவர் மரங்கள் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தார்.

பிரதமர் மோடி பாராட்டு
இவரது சேவையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார். அதாவது அவரது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது கல்மனே காமேகவுடாவை குறிப்பிட்டு பாராட்டினார். தரிசு நிலங்களில் குளம் அமைத்து பறவைகள் இயற்கையை பாதுகாத்து நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டினார். மேலும் கர்நாடக அரசு சார்பில் ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டது.

வயது முதிர்வால் மரணம்
இந்நிலையில் வயது முதிர்வால் கல்மனே காமேகவுடா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மருத்துவ செலவை அரசு ஏற்றது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவர் நேற்று இறந்தார். இவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

மனைவி- 2 மகன்கள்
இறந்த கல்மனே காமேகவுடாவுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கல்மனே காமேகவுடா குளம் தோண்டுவதை அந்தபகுதி மக்கள் துவக்கத்தில் கேலி, கிண்டல் செய்தனர். இருப்பினும் கல்மனே காமேகவுடா தனது முயற்சியை கைவிடாமல் சாதித்தார். மேலும் சர்வதேச யோகா தினத்திற்காக மைசூர் வந்த பிரதமரை சந்திக்க காமேகவுடா விருப்பம் தெரிவித்த நிலையில் உடல் நலக்குறைவால் அது முடியாமல் போன நிலையில் அவர் தற்போது இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications