கர்நாடகா: பாஜக கதறல்- ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எம்எல்ஏ சோமசேகர் கட்சி மாறி ஓட்டு!
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. சோமசேகர் கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக பாஜக தலைமை கொறடா தொட்டண்ணகவுடா ஜி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 ராஜ்யசபா எம்பி இடங்கள் பதவி காலம் காலியாகிறது. இதனைத் தொடர்ந்து 56 இடங்களுக்கும் பிப்ரவரி 27 (பிப்.27, இன்று) தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 15 மாநிலங்களிலும் 56 இடங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டன. ராஜஸ்தானில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகி உள்ளனர்.

காலியாகும் 4 இடங்கள்: கர்நாடகாவில் மொத்தம் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியான மத்திய அமைச்சர் ராஜீவ் சேகர், நசீர் உசேன் (காங்கிரஸ்), ஜிசி சந்திரசேகர் (காங்கிரஸ்), ஹனுமந்தய்யா ஆகியோரது பதவிக் காலம் ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது. இதனால் இன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
4 இடங்களுக்கு 5 வேட்பாளர்கள்: கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், நசீர் உசேன் அறிவிக்கப்பட்டனர். பாஜக சார்பாக நாராயண பண்டகே அறிவிக்கப்பட்டார். 4 காலி இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக தேவகவுடா குடும்பத்தின் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS, ஜேடிஎஸ்) குபேந்திர ரெட்டியை வேட்பாளராக அறிவித்து. இதனால் 4 காலி இடங்களுக்கு 5 வேட்பாளர்கள் போட்டி என்கிற நிலை உருவானது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ்: ராஜ்யசபா எம்.பி.க்கள், மாநிலங்களில் சட்டசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். கர்நாடகாவில் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 135 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜா வெங்கடப்ப நாயக் காலமானார். இதனால் கர்நாடகா சட்டசபையில் காங்கிரஸ் பலம் 134 ஆக குறைந்தது. இதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் 3 வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் வாக்களித்தால் மூவருமே எளிதாக வெற்றி பெறுவர். இருந்த போதும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் அல்லாத ஜனார்த்தன் ரெட்டி, தர்ஷன் புட்டண்ணய்யா ஆகியோரது ஆதரவை கோரியிருக்கிறது. இவர்களை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் சந்தித்து பேசியிருந்தார்.
பாஜக, ஜேடிஎஸ்: கர்நாடகா சட்டசபையில் பாஜகவுக்கு 66 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 45 பேர் வாக்களிக்கும் போது பாஜகவின் வேட்பாளரும் எளிதாக வெல்வார். கர்நாடகா சட்டசபையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களுடன் பாஜகவின் 21 எம்.எல்.ஏக்கள், ஜேடிஎஸ் கட்சியின் குபேந்திர ரெட்டிக்கு வாக்களிப்பர். அப்படி இருந்தும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் குபேந்திர ரெட்டி வெற்றி பெற முடியும்.
ரிசார்ட்டுகளில் சிறை: இதனையடுத்து காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சி தலைமை 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைக்க ரிசார்ட் அரசியலை கையில் எடுத்தன. 3 கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் தனித்தனியாக ரிசார்ட்டுகளில் 'சிறை' வைக்கப்பட்டனர். ரிசார்ட்டுகளில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டு எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
144 தடை உத்தரவு: இத்தகைய பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் கர்நாடகா சட்டசபை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
கட்சி மாறி ஓட்டு: இந்த பின்னணியில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ. சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளார். இதனை கர்நாடகா சட்டசபை பாஜக தலைமை கொறடா தொட்டண்ணா கவுடா ஜி. பாட்டீல் உறுதி செய்துள்ளார். மேலும் சோமசேகர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும் தொட்டண்ணா கவுடா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications