4 வருஷம் முந்தைய வாகனங்கள் அத்தனையிலும் நம்பர் பிளேட் மாற்றனும்.. வந்தது உத்தரவு.. பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு பதிவு செய்த அனைத்து வாகனங்களிலும் எச்எஸ்ஆர்பி வகை நம்பர்பிளேட்டை நவம்பர் மாதம் 17 ம் தேதிக்குள் பொருத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இல்லாவிட்டால் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது வாகனங்களுக்கு உயர் பாதுகாப்புக்கான பதிவெண் பலகை எனும் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் எச்எஸ்ஆர்பி (High Security Registration Plate) என அழைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக நம்பர் பிளேட்டை ஸ்குரு வைத்து பொருத்துவார்கள். ஆனால் இந்த எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் என்பது ரிவெட் முறையில் பொருத்தப்படுகிறது. இதனால் பதிவெண் பலகையை எளிதில் கழட்டி மாட்டுவது என்பது இயலாத காரியமாகும். இதன்மூலம் போலி பதிவெண் பலகை பயன்பாடு என்பது குறையும்.
தற்போது புதிதாக வாங்கும் வாகனங்களில் எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் பொருத்தும் நடைமுறை என்பது அமலுக்கு வந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பழைய வாகனங்களுக்கும் எச்எஸ்ஆர்பி வகை நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசும் செய்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா போக்குவரத்து துறை சார்பில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது கர்நாடகாவில் 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு பதிவு செய்த அனைத்து வாகனங்களில் எச்எஸ்ஆர்பி வகை நம்பர் பிளேட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நவம்பர் மாதம் 17 ம் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. இந்த தேதிக்குள் எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட்டை பொருத்தாவிட்டல் அதன்பிறகு ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2019 ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு முன்பு வாகனங்கள் வாங்கியோர் அனைவரும் எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் பொருத்துவது முக்கியமானதாகும். இந்த நம்பர் பிளேட்டை அதற்குரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மூலம் வாகன ஓட்டிகள் பொருத்தி கொள்ளலாம். இந்த எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.250 முதல் ரூ.500 வரை செலவாகும்.
இந்த கட்டணம் என்பது வாகனங்களை பொறுத்து மாறுபடும். இந்த எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் என்பது எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டாகும். இது அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், குரோமியம் ஹாலோகிராமால் உருவாக்கப்பட்ட ஸ்டாம்ப் மற்றும் லேசரால் பொறிக்கப்பட்ட 10 டிஜிட் எண் இருக்கும். இது எளிதில் அழியாது.
இதனால் முறைகேடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் இந்த நம்பர் பிளேட் என்பது அதிக பாதுகாப்பானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான் கர்நாடகா போக்குவரத்து துறை இந்த நம்பர் பிளேட் முறையை பொருத்த உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications