ஜூன் 21ம் தேதி முதல்.. ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள்.. நிபுணர் குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை
பெங்களூர்: ஜூன் 21ம் தேதி முதல், ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை வழங்கலாம், அதிலும் குறிப்பாக, உணவகங்களைத் திறக்கலாம், திருமண மண்டபங்கள், மால்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதிக்கலாம் என்று, கர்நாடக அரசுக்கு அந்த மாநில, கொரோனா ஆய்வு தொடர்பான மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தைப் போலத்தான் கர்நாடகாவிலும் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது.
பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் இந்த தளர்வு அமலில் உள்ளது. மைசூர், சாம்ராஜ்நகர் உட்பட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு உள்ளது.

அதிரடி பரிந்துரை
இந்த நிலையில்தான், மால்கள், உணவருந்தும் உணவகங்கள், திருமண அரங்குகள், வணிக வளாகங்கள், வணிக பாதைகள் மற்றும் மூடிய சந்தைகள் போன்ற சில விஷயங்களுக்கு அரசு அனுமதிக்கலாம் என்று, அரசுக்கு, மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதேநேரம் ரெஸ்டாரண்டுகளில் பாதி அளவுக்கு வாடிக்கையாளரை அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உணவகம்
உணவருந்தும் உணவகங்கள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவீத வாடிக்கையாளருடன் மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், திருமண மண்டபங்கள் அதிகபட்சமாக 50 பேரை அனுமதிக்க முடியும், என்று பரிந்துரை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிபந்தனை
டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் (டிபிஆர்) போன்ற பல்வேறு அளவீடுகள் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும், அப்படியானால் இதைச் செய்யலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம். அதாவது, 100 பேருக்குப் பரிசோதனை செய்தால் 5 சதவீதம் பேருக்குக் கீழேதான் நோய் இருக்க வேண்டும். அதை விட அதிகம் என்றால் இந்த சலுகை வேண்டாம் என்று இக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆக்சிஜன் வசதி
ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் நோயாளிகள் எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் மேல் இல்லாத மாவட்டங்களில் இந்த சலுகை தரப்படலாம் என பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரம் வேண்டாம்
இதுகுறித்து, ஜெயதேவா அரசு மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சி.என்.மஞ்சுநாத் கூறுகையில், "கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை நாம் பின்பற்றாவிட்டால், மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம். மூடிய சந்தைகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்களைத் திறப்பது பற்றி அரசு உடனே முடிவெடுக்கக் கூடாது. பெங்களூரில் கேஸ்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால் மட்டுமே அதை அனுமதிக்க முடியும். " என்றார்.

பள்ளிகள் திறப்பு எப்போது
ஜிம் மற்றும் யோகா மையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள், கிளப்ஹவுஸ்கள் போன்றவற்றை இப்போது திறக்க வேண்டாம் என்று இந்த குழு பரிந்துரை செய்துள்ளதாம். இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குதல் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது ஆகியவற்றை தனித்தனியாக முடிவு செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications