காவிரி பாயும் மண்டியாவில் மாஜி முதல்வர் குமாரசாமி போட்டி.. பாஜகவை நம்பிய சுயேச்சை எம்பிக்கு ‛கல்தா’
பெங்களூர்: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் மண்டியா லோக்சபா தொகுதியில் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி போட்டியிடுகிறார்.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது.

மாறாக பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் பாஜகவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறியது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த குமாரசாமி, ‛‛வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது நாளை வெளியிடப்படும். நான் கடந்த 2 நாட்களாக மண்டியா லோக்சபா தொகுதியில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
அதேபோல் நான் இப்போது எம்எல்ஏவாக உள்ள ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். எங்கள் கட்சிக்கு எழுச்சி தேவையாக உள்ளது. இதனால் வரும் தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதன்படி வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளேன்'' என்றார்.
இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் குமாரசாமி மண்டியா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சிக்கு சிக்கபள்ளாப்பூர், மண்டியா, ஹாசன் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஹாசன் தொகுதியில் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுகிறார். சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் மல்லேஷ் பாபு களமிறங்கும் நிலையில் மண்டியா தொகுதியில் குமாரசாமி போட்டியிட உள்ளார்.
மண்டியா தொகுதியில் ஜேடிஎஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் குமாரசாமி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2019 தேர்தலில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் சுயேச்சை வேட்பாளரான மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவிடம் தோற்றார்.
சுயேச்சை எம்பியான சுமலதா தற்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும் அவர் மீண்டும் மண்டியாவில் போட்டியிட முடிவு செய்த நிலையில் அந்த தொகுதி குமாரசாமிக்கு பாஜக வழங்கி உள்ளது. இதனால் சுமலதாவும் அதிருப்தியில் உள்ளார். ஒருவேளை மீண்டும் சுமலதா அங்கு சுயேச்சையாக களமிறங்கினால் குமாரசாமிக்கு கடும் சவால் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications