கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை
பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் துவங்கி ராஜஸ்தான், ஜார்கண்ட் என்று தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது என்றாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரிய அளவில் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ இருப்பதாக எம்.எல்.சி.யாக பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர் முதலில் தெரிவித்து, பின்னர் இதை கர்நாடகா மாநில பாஜக தலைவர் நளின்குமார் கடீல் வழி மொழிந்துள்ளார்.

இதுகுறித்து மேலும் நளின்குமார் கூறுகையில், ''யோகேஸ்வர் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து கடந்தாண்டில் ஆட்சி அமைத்து இருந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு அதரவு தெரிவிப்பதாகக் கூறினர். பின்னர் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இவர்களில் சிலர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா தலைதூக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக எம்.எல்.சி. யோகேஸ்வர் அளித்திருக்கும் பேட்டியில், ''முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி பாஜக மற்றும் முதல்வர் எடியூரப்பா மீது மிருதுவான போக்கை கடைபிடித்து வருகிறார். தற்போது பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். ரமாநகரில் அவருக்கு அவரது சகோதரர்கள் தொல்லை கொடுத்து வருவதால், அவரது பார்வை தற்போது பாஜக பக்கம் திரும்பியுள்ளது. ரமாநகர் அவரது சொந்த தொகுதி. அங்கு அவருக்கு எதிராக குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். ஆதலால், தற்போது அவர் காங்கிரசுக்கு எதிராக பேசி வருகிறார்'' என்றார்.
பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜகவைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தன்னை தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறுகையில், ''கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை பாஜக மேலிடம் நீக்க இருப்பதாக பாஜக எம்.எல்.சி. யோகேஸ்வர் என்னிடம் தெரிவித்தார்'' என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
இதற்கிடையே விரைவில் கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பேசி இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, ''மாநிலத்தில் பாஜகவை எதிர்க்க மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சியாக இருப்பதால் ஒத்த மனநிலை இருப்பவர்களுடன் கூட்டணி அமைக்கலாம். மத்தியப்பிரதேசத்தில் நடந்தது ராஜஸ்தானிலும் நடக்கிறது. ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை பாஜக கலைத்து வருகிறது. இதை எதிர்க்க மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும்.
கடந்தாண்டு வெள்ளத்தின்போது ஏற்பட்ட சிக்கல்களை எங்களது அரசு நல்ல முறையில் கையாண்டது. அப்போது குமாரசாமி அரசு அறிவித்திருந்த நிதியுதவியை தற்போது பாஜக அரசு நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கருத்துக்களை குமாரசாமி எதிர்த்தார். இந்த வகையில் அவர் பாஜகவுடன் இணைக்கமாக இருக்கிறார் என்று கூறுவது தவறு'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications