தர்மஸ்தலா மர்மம்: லிஸ்டில் பிரகாஷ் ராஜ் பெயர்! நடிகர் கொடுத்த அதிரடி விளக்கம்! நடந்தது என்ன?
பெங்களூரு: கர்நாடகாவையே உலுக்கி வரும் தர்மஸ்தலா விவகாரத்தில், தனது பெயர் அடிபடுவது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார். "இன்னும் இரண்டு நாட்களில் நேரில் வந்து உண்மையை உடைப்பேன்" என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தர்மஸ்தலா கோயில் நகரத்தைச் சுற்றி கடந்த 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் ரகசியமாகப் புதைக்கப்பட்டதாக, கடந்த 2025-ம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பகீர் புகாரை கிளப்பினார்.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத சடலங்கள் என இந்த வழக்கு இந்தியாவையே அதிர வைத்தது.
பிரகாஷ் ராஜ் பெயர் எப்படி வந்தது?
இந்தச் சதித் திட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சின்னையா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், "சில நபர்கள் சொன்னபடி வாக்குமூலம் அளிக்கும்படி நான் வற்புறுத்தப்பட்டேன்.
நடிகர் பிரகாஷ் ராஜ் என்னிடம் தமிழில் பேசினார். வரும் 29-ம் தேதி உன்னை நேரில் வந்து கட்டிப் பிடித்துக் கொள்வேன் என்று அவர் என்னிடம் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.
பிரகாஷ் ராஜின் பதிலடி
தன்னைப் பற்றி பரவும் செய்திகளுக்கு கன்னடத்தில் ட்வீட் செய்துள்ள பிரகாஷ் ராஜ், அதில் கூறியிருப்பதாவது: "அனைவருக்கும் வணக்கம்.. தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி சில செய்திகள் விவாதிக்கப்படுவதை கவனித்தேன்.
இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையோடு தொடர்புடையது. எனவே, எழும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க வேண்டியது என் கடமை.
நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் நேரில் வந்து ஊடக நண்பர்கள் முன்னிலையில் விரிவான விளக்கம் அளிப்பேன். அதுவரை, சில விஷமிகள் கிளப்பிவிடும் வதந்திகளையும், இந்தச் செய்திக்கு அவர்கள் கொடுக்கும் தேவையற்ற வண்ணங்களையும் நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பில் கர்நாடகா
ஏற்கனவே பல மர்ம முடிச்சுகளைக் கொண்ட தர்மஸ்தலா வழக்கில், இப்போது ஒரு முன்னணி நடிகரின் பெயர் இழுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் அளிக்கப் போகும் அந்த 'நேரடி விளக்கம்' என்னவாக இருக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த திரையுலகமும், பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications