சித்தராமையா தூள் கிளப்புறாரே.. ஒரே நாளில் பல லட்சம் அரசு ஊழியர்களின்.. கண்ணீரை துடைச்சிட்டாரே!
பெங்களூர்: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநிலத்தை சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்களின் கனவு இதன் மூலம் நினைவாகி உள்ளது.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. இதில் அம்மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

ஆகஸ்ட் 1 முதல், ஊழியர்களுக்கு 27.5% சம்பள உயர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு அரசு ஊழியர்களின் நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சித்தராமையா கூறி உள்ளார்.
இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த ஆண்டுக்கு ₹ 17,440.15 கோடி கூடுதல் செலவாகும். இந்த நடவடிக்கை ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு நியாயமான இழப்பீடு வழங்க வழி செய்யும், அரசு ஊழியர்கள் மேலும் சிறப்பாக பணிகளை செய்ய வழி செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்மாநில அரசின் பல லட்சம் ஊழியர்கள் நீண்ட காலமாக 20 சதவிகிதத்திற்கு மேல் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஏழாவது ஊதியக் குழு என்பது மக்களின் கோரிக்கைகளில் ஒன்றாகும், அது எங்கள் அறிக்கையிலும் இருந்தது. அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இதன் மூலம் சுமார் 14 முதல் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
மார்ச் 2023 இல், அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஊழியர்களுக்கு இடைக்கால 17 சதவீத சம்பள உயர்வை வழங்கினார், இதில் சித்தராமையா நிர்வாகம் 10.5 சதவீத புள்ளிகளை சேர்க்க முடிவு செய்துள்ளது. இது அடிப்படை சம்பளத்தில் மொத்தம் 27.5 சதவீதமாக உயர்த்தப்படும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைபடி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அகவிலைப்படி உயர்வு: கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications