எச்ஐவி பாசிட்டிவ்வாம்.. தம்பினு கூட பாராமல் அக்காள் கொடுத்த தண்டனை! நடுங்கிப்போன கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் விபத்தில் சிக்கிய 23 வயது தம்பிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் என்பது தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த அக்காள் மேல்சிகிச்சைக்காக தம்பியை அழைத்து சென்று தனது சகோதரருடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து நாடகமாடிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகா தும்மி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் (வயது 23). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவ்வப்போது பெங்களூரில் இருந்து தும்மி கிராமத்துக்கு சென்று வந்தார்.

கடந்த 23ம் தேதி மல்லிகார்ஜுன் தனது நண்பர்களுடன் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மல்லிகார்ஜுன் உள்பட அவரது நண்பர்கள் அனைவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சித்ரதுர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லிகார்ஜுன் படுகாயமடைந்து இருந்தார். இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக தாவணகெரேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மல்லிகார்ஜுனுக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது.
இது மல்லிகார்ஜுன் உடன் இருந்த 26 வயது நிரம்பிய அக்காள் நிஷாவிற்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவருத்தம் அடைந்தார். அதோடு சகோதரருக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தால் குடும்பத்தின் மானம் போய்விடும் என்று அவர் நினைத்தார். இதற்கிடையே தான் மல்லிகார்ஜுனுக்கு மேல்சிகிச்சை அளிக்க பெங்களூர் மரு்ததுவமனைக்கு அழைத்து செல்லும்படி தாவணகெரே மருத்துவர்கள் கூறினார்.
இதையடுத்து நிஷா தனது கணவர் மஞ்சுநாத்துடன் ஆம்புலன்ஸில் ஏறி மல்லிகார்ஜுனை பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் பாதிவழியில் மல்லிகார்ஜுன் இறந்தார். இதனால் பெங்களூர் மருத்துவமனைக்கு செல்லாமல் நிஷா தனது கணவர் மஞ்சுநாத்துடன் சகோதரர் மல்லிகார்ஜுன் உடலை கிராமத்துக்கு கொண்டு வந்தார். அதன்பிறகு அவரது உடல் இறுதி சடங்கு நடந்தது.
அப்போது மல்லிகார்ஜுன் இறப்பில் அவரது தந்தை நாகராஜப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் மல்லிகார்ஜுன் கழுத்தில் காயங்கள் இருந்தது. மேலும் கழுத்தை இறுக்கி இருப்பதற்கான அடையாளம் இருந்தது. இதுபற்றி அவர் தனது மகள் நிஷா மற்றும் மருமகன் மஞ்சுநாத் ஆகியோரிடம் கேட்டார்.
அப்போது தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. தனது தந்தை நாகராஜப்பாவிடம் நிஷா, ‛‛தம்பி மல்லிகார்ஜுனுக்கு எச்ஐவி பாசிட்டிவ் வந்துள்ளது. நீங்கள் 2 பேரும் (தாய் - தந்தை) வயது முதிர்வு, சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தம்பியும் கடன் சுமை இருப்பதாகவும் கூறி கவலைப்பட்டான். அதோடு எச்ஐவி பாதிப்பு குடும்பத்தில் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்று அஞ்சுவதாகவும் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினான். மேலும் தன்னை கொன்றுவிட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக கூறிவிடும்படி சொன்னான். இதனால் போர்வையை வைத்து கழுத்து இறுக்கி கொன்றோம்'' என்றார்.
இதை கேட்ட நாகராஜப்பா அதிர்ச்சியில் உறைந்துபோனார். தனது மகனனை கொன்றதாக மகள் நிஷா மற்றும் அவரது கணவர் மஞ்சுநாத் மீது குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நாகராஜப்பா சார்பில் மகள் நிஷா, மருமகன் மஞ்சுநாத் மீது ஹொலல்கெரே போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவை கைது செய்தனர்.
கணவர் மஞ்சுநாத் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சொத்துகளை அபகரிக்கும் வகையில் கொலை நடந்ததும், அதனை மறைக்க முயன்று போலீசில் சிக்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவை உலுக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications