காவிரியில் தண்ணீர் திறக்க கடும் எதிர்ப்பு.. நாளை மறுநாள் கர்நாடாகவில் அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்க பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் கர்நாடகாவில் அனைது கட்சி கூட்டம் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
காவிரி ஆற்று நீரை பங்கிடுவதில் தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை ஏற்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கர்நாடாகா, கேரளா, தமிழ்நாட்டில் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கிருஷணராஜசாகர், ஹேமாவதி ஆகிய அணைகளில் தண்ணீர் போதிய அளவு நிரம்பவில்லை. இதனால் கர்நாடகா தண்ணீரை திறக்க முடியவில்லை என்று கூறிவருகிறது.

அதேநேரம் வறட்சி காலங்களில் எப்படி நீரை பகிர வேண்டும். அதன்படி நீரை பகிர வேண்டும் என்று கர்நாடகாவிற்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.. இதன்படி பார்த்தால் ஜூன் மாதம் 10 டி.எம்.சி., ஜூலை-34, ஆகஸ்டு-50, செப்டம்பர்-40, அக்டோபர்-22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3 என ஒவ்வொரு மாதத்திற்கும் கணக்கிட்டு மொத்தம் 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம், தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிட வேண்டும்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் போதிய அளவு பருவ மழை கர்நாடகாவில் பெய்யவில்லை. அதனால் அப்போது தண்ணீர் போதிய அளவு கர்நாடகா திறக்கவில்லை. ஆனால் ஜூலையில் நன்றாக பெய்தது. ஜூலையில் ஓரளவு தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடாகவில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது.. இதனால் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுத்துவருகிறது. தங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்று அறிவித்தது இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அதில் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி உள்ளது. அந்த மனு அவசர மனுவாக இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தனது நிலைப்பாடு குறித்து இன்று பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது. அத்துடன் அண்மையில் காவிரியில் நீர் திறக்குமாறு காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரவும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
வினாடிக்கு சுமார் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு தற்போது வந்து கொண்டிருக்கிறது.. கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 717 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்ததற்கு யாரை கேட்டு தண்ணீர் திறந்தீர்கள் என்று எதிர்க்கட்சிகளான பாஜக ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளன. காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளன.நீதிமன்ற உத்தரவின்படி தான் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டுள்ள நிலையில், காவிரி பிரச்சினையில் நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 23-ந் தேதி(நாளை மறுநாள்) நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகம் சார்பில் நாளை(இன்று) பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம். நாங்கள் நமது விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். அதே நேரத்தில் கோர்ட் உத்தரவையும் நாம் மதிக்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய டிகே சிவகுமார், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் அரசியல் செய்கின்றன என்றும், அவர்களின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் தான் வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications