“மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை”.. மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்த சித்தராமையா
பெங்களூர்: மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல மழை பெய்ததால், இந்த முறை தமிழகத்திற்கு கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்தது. மேகதாது அணை கட்டினால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீர் பகிர்வு கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் தன் முடிவில் உறுதியாக உள்ள கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் எனக் கூறி வருகிறது. அணை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவ்வப்போது மேகதாது அணை குறித்துப் பேசி பரபரப்பைப் பற்ற வைத்து வருகின்றனர் கர்நாடக ஆட்சியார்கள்.
இந்நிலையில், மைசூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மேகதாது அணை திட்டத்தால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தத் திட்டத்தால் தமிழக விவசாயிகள் நலனுக்கு தீங்கு ஏற்படாது. மேகதாது அணை கர்நாடகாவின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது.
கடந்த, 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் அதிக மழை பெய்துள்ளதால் நாங்கள் கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம். இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
எத்தினஹோலே திட்டத்திற்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. விதிக்கப் போவதும் இல்லை. அந்த திட்டத்தை செயல் படுத்துவதில் உறுதியாக உள்ளோம். மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழ்நாடு உறுதியாக இருந்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம் எனப் பேசி இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications