பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடையை நீக்க தேஜஸ்வி சூர்யா கடும் எதிர்ப்பு
பெங்களுர்: வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்குவது குறித்து வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிந்தேன். பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கான தடையை நீக்க கூடாது என்று தேஜஸ்வி சூர்யா எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தையும், கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தையும் இணைக்கும் பகுதியாக பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. ஊட்டியில் இருந்து மிகவும் அடர்ந்த வனப்பகுதியான முதுமலை வழியாக குண்டல்பேட் சென்று, அதன்பிறகு மைசூர் செல்லும் இந்த சாலையில் குண்டல்பேட் தாண்டி விட்டால் மலை ஆரம்பித்துவிடும். அந்த சாலையில் பகலில் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. இரவில் செல்ல எந்த ஒரு அனுமதியும் இல்லை.

ஏனெனில் இரவில் சர்வ சாதாரணமாக வனவிலங்குகள் வந்து செல்லும். யானைகள், புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குள் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக உலாவரும்.. இதை கருத்தில் கொண்டே இரவில் செல்ல அனுமதி இல்லை.. காலையில் தான் இருவழியாக சென்றுவர முடியும். இந்த தடை நீண்ட காலமாக இருந்து வருகிறது.. இந்நிலையில் பந்திபூர் வனப்பகுதி வழியாக இரவில் வாகனங்கள் செல்ல உள்ள தடை நீக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
பா.ஜனதா தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி. தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி பந்திப்பூர் வனப்பகுதியில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்குவது குறித்து வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிந்தேன். காங்கிரஸ் மேலிடம் மற்றும் கேரள எம்.பி. ஒருவரின் அழுத்தம் காரணமாக அந்த தடையை நீக்க, கர்நாடக அரசு முயற்சி செய்கிறது.
பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள வன உயிரினங்களை காப்பதில் இந்த இரவு நேர தடை என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் இந்த தடை முடிவை உறுதியாக செயல்படுத்தினோம். சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2019-ம் ஆண்டு தடை உத்தரவை அமல்படுத்தும்படி உத்தரவிட்டது. அதனால் காங்கிரஸ் அரசு எக்காரணம் கொண்டும் பந்திப்பூா் வனப்பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு விதித்துள்ள தடை ஆணையை நீக்க கூடாது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் நோக்கத்திற்காக கர்நாடகத்தின் வனம், வன உயிரினங்கள், அதன் எதிர்காலத்தை காப்பதில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications