நிலவின் மீது உளவு.. சந்திரயான் 3ஐ போட்டோ எடுத்த சந்திரயான் 2.. திடீரென டெலிட் செய்த இஸ்ரோ.. ஏன்?
பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் இந்த விக்ரம் லேண்டரை 4 ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் துல்லியமாக போட்டோ எடுத்திருக்கிறது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த லேண்டரை தரையிறக்க விஞ்ஞானிகள் கடின உழைப்பை செலுத்தியிருந்தனர். ஏனெனில் சந்திரயான் 3 ஏவப்பட்ட பின்னர் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. குறிப்பாக சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவை சுற்றி வந்த பின்னர் தரையிறங்க வேண்டும். இந்த செயல்பாட்டின் போது விண்கலத்திலிருந்த பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை சுற்ற தொடங்கியபோது அதற்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வந்தது.
இறுதியாக அதன் தூரம் நிலவுக்கு குறைந்தபட்சமாக 30 கி.மீ, அதிகபட்சமாக 100 கி.மீ என்கிற அளவில் குறைக்க பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்திலிருந்த உத்தரவு கொடுக்கப்பட்டது. ஆனால் விக்ரம் லேண்டர் இந்த உயரத்திற்கு பதிலாக 25X134 என்கி உயரத்திற்கு வந்துவிட்டது. இதுவே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியது. இருப்பினும் இது வேறு எந்த பிரச்னையையும் ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது.
தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த ரோவர் 14 நாட்கள் (1 நிலவு நாள்) ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரை 4 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்திருக்கிறது. இதனை இஸ்ரோ தற்போது 'X' சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து இதனை இஸ்ரோ டெலிட் செய்திருக்கிறது. இருப்பினும் இஸ்ரோவின் பதிவு ஸ்கிரீன் ஷாட்களாக டிரெண்டாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications