”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்க தேசிய தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தலைமையை முற்றிலும் மாற்றுவதற்கான வேலைகளை 'பாஜக மேலிடம்' முன்னெடுத்துள்ளதாகச் சொல்கின்றனர் தாமரை சொந்தங்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்பியது. தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொண்ட போதிலும், தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

BJP Annamalai Amit Shah

இதனால் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து தேசிய தலைமையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியிருப்பது தமிழக பாஜகவுக்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது.

பாஜக

குறிப்பாக அண்ணாமலையுடன் நெருக்கமாக செயல்பட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினரின் எதிர்கால நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமை கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சில முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட சிலர் வெளியேறியதை தொடர்ந்து மேலும் விலகல்கள் ஏற்படக்கூடாது என்பதில் தேசிய தலைமை கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

அண்ணாமலை

இதற்காக கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் தமிழக பாஜக நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிடப் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோருடனும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயினார் நாகேந்திரன்

இந்த ஆலோசனைகளில் மாநில நிர்வாக அமைப்பை புதுப்பிப்பது, மாவட்ட அளவிலான பொறுப்புகளில் மாற்றம் செய்வது, புதிய தலைமுறையினரை முன்னிலைப்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாநிலத் தலைவர் பதவிக்காக தற்போது மூன்று பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப. கனகசபாபதி மற்றும் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக பேசப்படுகின்றன.

ராம சீனிவாசன்

இதில் பேராசிரியர் ராம சீனிவாசனின் பெயர் முன்னணியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அமைப்பு ரீதியான அனுபவம், நீண்டகால கட்சி பணி மற்றும் தேசிய தலைமையுடன் உள்ள தொடர்பு போன்ற காரணங்களால் அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கும் புதிய நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கே.டி. ராகவன்

அந்தப் பொறுப்புக்கு கே.டி. ராகவனின் பெயர் முக்கியமாக பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜகவின் அமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பொறுப்புக்கு அனுபவமிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்பதில் தேசிய தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாவட்டத் தலைவர்கள், மண்டல நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்புகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அடித்தள அமைப்பை மீண்டும் பலப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை ஈர்ப்பது மற்றும் இளைஞர்களை கட்சியுடன் இணைத்து வைத்திருப்பது போன்ற இலக்குகளை மனதில் கொண்டு இந்த மறுசீரமைப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மாற்றங்கள் குறித்து பாஜக தலைமையகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அமித் ஷா

ஆலோசனைகள் இன்னும் தொடர்வதாகவும், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வரும் நிலையில், அண்ணாமலை விலகலுக்குப் பிறகு அமித் ஷா எடுக்கும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+