அந்தரங்க வீடியோ லீக்காகும்.. கிச்சா சுதீபுக்கு மிரட்டல்! மர்ம நபர் யார்? பாஜகவை ஆதரித்தவுடன் சோதனை
பெங்களூர்: நடிகர் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், தனது அந்தரங்க வீடியோவை வெளியிடுவோம் என மர்ம நபர்கள் தனக்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுத்ததாக காவல்துறையிடம் அவர் அளித்து இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் பதவிகாலம் நிறைவடைய இருப்பதை அடுத்து வரும் மே மாதம் 10 ஆம் தேதி அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் குதித்துள்ளன.

பாஜகவின் திட்டம்
ஆளும் பாஜகவை பொறுத்தவரை கன்னட நடிகர்களை தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கி மக்களின் ஆதரவை பெற திட்டமிட்டது. அதன் அடிப்படையில் கேஜிஎப் ஹீரோ யஷ், காந்தாரா இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரை பாஜக தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

பாஜகவில் கிச்சா சுதீப்?
அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் இன்று கிச்சா சுதீப் பாஜகவில் இணைவார் என்றும் நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் #WeDontWantKicchaInPolitics என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

மிரட்டல் கடிதம்
இந்த பரபரப்புக்கு மத்தியில் கிச்சா சுதீபின் மேலாளருக்கு மர்ம நபரிடம் இருந்து ஒரு மிரட்டல் கடிதம் சென்று இருக்கிறது. சுதீபின் மேலாளர் ஜாக் மஞ்சுவுக்கு அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய அந்த கடிதத்தில், கிச்சா சுதீபின் தனிப்பட்ட அந்தரங்க வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிட்டுவிடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

அந்தரங்க வீடியோ
இதனால் அதிர்ச்சியடைந்த கிச்சா சுதீப் மேலாளர், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். அதன் அடிப்படையில் புட்டனஹள்ளி காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளார்களை சந்தித்த கிச்சா சுதீப் மிரட்டல் கடிதம் தொடர்பாகவும் பேசி உள்ளார்.

கிச்சா சுதீப் பேட்டி
அதில், "எனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று தெரியும். சினிமா துறையை சேர்ந்த ஒருவர்தான் எனக்கு இதை அனுப்பி உள்ளார். தேவையான நேரத்தில் அவர்களுக்கு உரிய பதிலடியை நான் கொடுப்பேன். கடினமான நேரங்களுக்கு எனக்கு துணை நிற்பவர்களுக்கு நான் ஆதரவளிப்பேன். நான் எந்த கட்சிக்காகவும் தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்காகவும் நான் தேர்தலில் சீட் கேட்கவில்லை. பாஜகவுக்காக மட்டுமே பிரச்சாரம் செய்ய உள்ளேன்." என்றார்.












Click it and Unblock the Notifications