"புலியைப் பிடிப்பதில் அலட்சியம்".. வனத் துறையினரை கூண்டில் அடைத்து சம்பவம் செய்த கர்நாடக மக்கள்
பெங்களூர்: கர்நாக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் புலி நடமாடுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், வனத் துறையினர் மீண்டும் தாமதமாக வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத் துறையினரைப் பிடித்து கூண்டில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் அருகே உள்ளது பொம்மலாபுரா கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து, கால்நடைகளை கொன்று வேட்டையாடி வந்துள்ளன. இதனால், பொதுமக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொம்மலாபுரா கிராமத்தில் கங்கப்பா என்பவரின் நிலத்தில் புலியைப் பிடிப்பதற்கான பெரிய கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த கூண்டில் எந்தவொரு வன விலங்குகளும் சிக்கவில்லை. அதேசமயம், சிறுத்தை, புலியை யானைகள் மூலமாக வனப் பகுதிக்குள் விரட்டவும் வனத் துறையினர் எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்ளாததால் அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை கிராமத்தின் எல்லைப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், வனத் துறையினர் விரைந்து வராமல் மிகவும் தாமதமாக அப்பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் வருவதற்குள் புலியும் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதனால், கடும் கோபமடைந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை பிடித்து புலிக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைத்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, குண்டுலுபேட், பண்டிப்பூர் மண்டல வனத் துறை அதிகாரிகள் சுரேஷ், நவீன் ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 மாதங்களாக வன விலங்குகளின் நடமாட்டத்தால் வீட்டை விட்டுக் கூட வெளிவர முடியாமல் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளோம். ஆனால், புலி நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தும் கூட ஊழியர்கள் அலட்சியமாகவும், தாமதமாகவும் வந்துள்ளனர் என்றனர்.
இதைத்தொடர்ந்து, புலியை சிறை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் வனத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர், கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வனத் துறையினரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications