ஒருநாளுக்கு 3 முறை.. பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‛வாட்டர் பெல்’ திட்டம்.. அசத்தும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் பாடவேளைகளுக்கு மத்தியில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிக்க வசதியாக ஒருநாளுக்கு 3 முறை ‛வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 3 முறை பள்ளிகளில் ‛வாட்டர் பெல்' ஒலிக்கப்பட உள்ளது.
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தண்ணீர் மிக முக்கியமானதாகும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினமும் அதிகளவில் குடிநீர் குடிக்க வேண்டியது அவசியமானதாகும். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
ஆனால் தற்போதைய சூழலில் பலரும் போதிய அளவுக்கு தண்ணீர் குடிப்பது இல்லை. இதனால் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவ-மாணவிகள் பாதிப்பு
குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 6 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் பள்ளி வேளைகளில் பல மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பது இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் டீ-ஹைட்ரேஷன், வயிற்று கோளாறு, தொண்டை வறட்சி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

தண்ணீர் குடிக்க இடைவேளை
இந்த பாதிப்புக்கு கர்நாடகாவும் விதிவிலக்கல்ல. கர்நாடகாவை சேர்ந்த மாணவ-மாணவிகளும் சரியாக தண்ணீர் குடிக்காமல் பள்ளிகளில் இருப்பது தெரியவந்தது. இது அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேசின் கவனத்துக்கு சென்றது. இந்நிலையில் இந்நிலையில் தான் கர்நாடகா பள்ளியில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்குவது போல் தண்ணீர் குடிக்கவும் சிறு இடைவேளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

3 முறை ‛வாட்டர் பெல்'
மேலும் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிக்கும் நேரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் குறித்த நேரத்தில் ‛வாட்டர் பெல்' ஒலிக்கப்பட உள்ளது. அதன்படி பள்ளி வேளையில் காலை 10.35 மணிக்கு முதல் முறையாகவும், மதியம் 12 மணிக்கு 2வது முறையாகவும், மதியம் 2 மணிக்கு மூன்றாவது முறையாகவும் தண்ணீர் குடிக்க ‛வாட்டர் பெல்' ஒலிக்கப்பட உள்ளது.

அமைச்சர் கூறியது என்ன?
இதுபற்றி கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் கூறியதாவது: ‛‛மாணவ-மாணவிகள் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதுபற்றி டிடிபிஐக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 3 முறை இந்த ‛வாட்டர் பெல்' ஒலிக்கப்படும். இதையடுத்து மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள்'' என்றார்.

கேரளாவை போல்...
இந்த நடைமுறை கேரளா உள்பட சில இடங்களில் அமலில் உள்ளது. இதனை கர்நாடகாவில் பின்பற்ற வேண்டும் என முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சிடிரவி மாஜி பள்ளி கல்வித்துறை அமைச்சரான சுரேஷ் குமாருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் 2019 காலக்கட்டத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் இந்த திட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அமலுக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications