ரைட்டு.. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்.. மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்த கர்நாடக பாஜக அரசு!
பெங்களூர் : அண்டை மாநிலமான கர்நாடக சட்ட மேலவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்து மதத்தில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் முயற்சிகள் நடப்பதாக வலதுசாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கர்நாடக, உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வர உள்ளது. வெவ்வேறு பெயர்களில் இந்தச் சட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.

மதமாற்றத் தடை சட்டம்
இந்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடக சட்ட மேலவையில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.. கர்நாடகாவில் மேலவை, சட்டசபை என இரண்டு சபைகள் உள்ளது. அதில் சட்டசபை இந்த மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்போது மேலவையிலும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

எங்கள் மதத்தைப் பாதுகாக்க
இது தொடர்பாகக் கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசாமி கூறுகையில், "நாங்கள் எங்கள் மதத்தைப் பாதுகாக்கிறோம், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம். அதேநேரம் யாருடைய சுதந்திரத்தையும் நாங்கள் கட்டுப்படுத்தவில்லை" என்று அவர் தெரிவித்தார். இந்த மசோதா மீது மிக விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைவேறுமா
இது குறித்து பாஜக எம்எல்சி டி.எஸ். அருண் கூறுகையில், "காங்கிரஸ், ஜேடியு கட்சிகள் கூட இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும். எல்லாம் சுமுகமாகச் செல்ல வேண்டும். சட்டசபையைத் தொடர்ந்து மேல்சபையில் இதை நிறைவேற்றப்படும். இது மக்கள் ஆர்வமாக உள்ள சட்டங்களில் ஒன்று" என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதா குறித்த விவாதத்தில் இதை எதிர்க்கவே திட்டமிட்டுள்ளது. இருப்பினும், பாஜகவுக்குத் தேவையான பெரும்பான்மை உள்ளதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறும்.

தண்டனை
இந்த புதிய மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு மசோதா, 2021, ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குச் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்வதைத் தடைசெய்யும். இந்த புதிய சட்டத்தின்படி கட்டாய மத மாற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். கட்டாய மத மாற்றத்தை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக இந்த மசோதா ஆக்குகிறது.

சட்டம் என்ன
கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தின்படி, "எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு மதத்தில் இருந்து மற்றொரு நபரை வலுக்கட்டாயமாக அல்லது மோசடியான வழிகள் அல்லது திருமண வாக்குறுதியின் மூலமாகவும் மாத மாற்ற முயலக் கூடாது" என்பதே இந்த சட்டமாகும்.

எப்போது கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா 2021 டிசம்பரில் கர்நாடக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அப்போது கட்சிக்கு மேலவையில் பெரும்பான்மை இல்லாததால் அது மேல்-சபையில் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மே மாதம், ஏழு எம்.எல்.சிக்கள் பாஜகவுக்குக் கிடைத்த நிலையில், மேலவையிலும் பெரும்பான்மையாகக் கிடைத்துள்ளது. இதனால் தான் இப்போது இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளது.












Click it and Unblock the Notifications