Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துண்டு துண்டாகும் பெங்களூர்.. 10 மாநகராட்சியாக விரைவில் பிரிப்பு? புது மசோதாவுக்கு ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை சிறப்பாக நிர்வகிக்கும் வகையிலான ‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா 2024'க்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த மசோதா நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பெங்களூர் 10 மாநகராட்சியாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று பெங்களூர். கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பெங்களூரில் குடியேறி வருகின்றனர். தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது 1 கோடியை தாண்டி விட்டது.

bangalore bengaluru karnataka

இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் ஒரு மாநகராட்சி மட்டுமே உள்ளது. இந்த மாநகராட்சியில் முதலில் 198 வார்டுகள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு வார்டுகளின் எண்ணிக்கை 225 என அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் தான் நிர்வாக காரணங்களுக்காக பெங்களூரை 5 மண்டலங்களாக பிரித்து 10 மாநகராட்சிகளை உருவாக்கும் நடவடிக்கையை ஆளும் கட்சியான காங்கிரஸ் தொடங்கி உள்ளது.

இதற்காக ‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா 2024' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த மசோதா நடப்பு மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா 2024'வின் நோக்கம் என்ன? அது பெங்களூரில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

‛கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா 2024' என்பதன் கீழ் பெங்களூர் நகரின் வளர்ச்சிக்கான திட்டம் தீட்டி, ஒருங்கிணைப்பதற்கு Greater Bengaluru Authority (பெங்களூர் வளர்ச்சி ஆணையம் அல்லது ஜிபிஏ) என்ற அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு பெங்களூர் நகரின் நிர்வாகத்தை 3 அடுக்கு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் அடுக்கு என்பது முதல்வர் மற்றும் பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சரை குறிக்கும். 2வது அடுக்கு என்பது பெங்களூர் வளர்ச்சி ஆணையத்தையும், 3வது அடுக்கு என்பது வார்டு கமிட்டியையும் குறிக்கும்.

மேலும் நிர்வாக காரணங்களாக 5 மண்டலங்கள் மற்றும் பல மாநகராட்சிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவாக உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என கர்நாடகா அரசு நம்புகிறது. அதன்படி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் 10 மாநகராட்சிகள் வரை உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது. தற்போது பெங்களூர் புறநகர் மற்றும் ராமநகர் மாவட்டத்தை பெங்களூர் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அந்த பகுதிகளையும் ஒன்றாக இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக ஒரு மாநகராட்சி உருவாக்கப்பட வேண்டும் என்றால் அந்த பகுதியில் மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் 5 ஆயிரம் மக்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது பெங்களூர் நகரின் மக்கள் தொகை என்பது 1 கோடியை கடந்துவிட்டது. கூடுதலாக பெங்களூர் புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களை இணைக்கும்போது மக்கள் தொகையின் எண்ணிக்கை என்பது இன்னும் அதிகரிக்கும். இதனால் 10 மாநகராட்சிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி தற்போதைய பெங்களூர் மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 400 ஆக்கவும், பிற மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை தலா 200 என பிரிக்கவும் திட்டமிடும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் புதிதாக 2,000 வார்டுகள் உருவாக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநகராட்சியில் மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் தற்போதைய சூழலில் பெங்களூர் மாநகராட்சி என்பது 708 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. ஆனால் இந்த மசோதாவின் மூலம் உருவாக்கப்படும் ஜிபிஏ என்பது 1,400 சதுர கிலோமீட்டர் அளவை கொண்டிருக்கும். இதில் எலக்ட்ரானிக் சிட்டி உள்பட பல புறநகர் பகுதிகளி்ல இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் 10 மாநகராட்சிகளை உருவாக்குவதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது.

இருப்பினும் கூட வார்டு மறுவரையறை, மாநகராட்சியின் எல்லை பகுதிகளை வரையறை செய்வது உள்ளிட்டவை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் பெங்களூர் மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல் என்பது நடைபெறவில்லை. இதுதொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் நிலுவையில் உள்ளன.

இத்தகைய சூழலில் தான் கிரேட்டர் பெங்களூர் ஆளுகை மசோதா 2024 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் கூட இந்த மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்த காங்கிரஸ் அரசு தீவிரமாக உள்ளது. பெங்களூர் மாநகராட்சியை பிரிக்க காங்கிரஸ் முனைவது இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்வராக இருந்தபோது பெங்களூர் மாநகராட்சியை 3 ஆக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+