காசு எடுக்க ஏடிஎம் போனா செம ஷாக்.. காசு போட்டால் இட்லி தரும் ஏடிஎம் இயந்திரம்.. வியந்த பெங்களூர்
பெங்களூர்: கர்நாடக தலைநகரில் கொண்டு வரப்பட்டுள்ள புதுவித ஏடிஎம், நெட்டிசன்களை கவரும் வகையில் உள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகர் என்று பெங்களூரை சொல்வார்கள். நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகப்படியான ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்ட நகரமாகப் பெங்களூர் இருக்கிறது.
இதனால் இந்தியாவுக்கு வரும் பல புதிய வசதிகளும் கூட பெங்களூருக்குத் தான் முதலில் வருகிறது. அது தொடர்பான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இட்லி
என்ன தான் பல வகையான உணவுகள் வந்தாலும் கூட இட்லிக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், பாருங்கள் எந்த டிபன் கடை என்றாலும் முதலில் காலியாவது இட்லியாகத் தான் இருக்கும். நள்ளிரவில் பிரியாணி கூட கிடைக்கும். ஆனால் பல இடங்களில் 9 மணி தாண்டினால் கூட இட்லி கிடைக்காது. இட்லியைத் தேடித் தேடியே அலைய வேண்டு இருக்கும். இதற்கு ஒரு தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றே பலரும் நினைப்பார்கள்.

ஏடிஎம்
உங்களுக்காகவே வந்துவிட்டது சூப்பர் தீர்வு! பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், இட்லி ஏடிஎம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அது மின்னல் வேகத்தில் இட்லியைச் சுட்டு, பேக் செய்து சுடசுட நமக்குத் தருகிறது. இதைப் பெங்களூரைச் சேர்ந்த ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரின் ஃப்ரெஷாட் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

சுடசுட இட்லி
இது முழுக்க முழு தானியங்கி வகையில் செயல்படும் வகையில் உள்ளது. நாம் ஆர்டர் செய்து கட்டணத்தைச் செலுத்திய சில நிமிடங்களில் இட்லி சுடப்பட்டு, பக்காவாக பெக் செய்யப்பட்டு சூடாக நமது கைகளில் வந்து விழுகிறது. கடந்த 2016இல் தனது குழந்தைக்கு உடம் சரியில்லாததால் நள்ளிரவில் இட்லி வாங்க சுற்றியதே இப்படிப்பட்ட இட்லி ஏடிஎமை உருவாக்கக் காரணமாக இருந்ததாக நிறுவன உரிமையாளர் ஷரன் ஹிரேமத் தெரிவித்து உள்ளார்.

இட்லி ஏடிஎம்கள்
இப்படி இட்லி தேடி அலைந்த அனுபவம் அனைவருக்கும் இருந்து இருக்கும். இதற்காக எந்தவொரு விஷயமும் முழு தீர்வை தராது. இட்லி ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்குவதே இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்தே இதை உருவாக்கியதாக ஷரன் ஹிரேமத் தெரிவித்து உள்ளார். இப்போதைக்கு இரு இடங்களில் மட்டுமே இட்லி ஏடிஎம்கள் வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது படிப்படியாகப் பல இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்முறை
தென்னிந்திய உணவைத் தானியங்கி முறையில் தயாரித்துக் கொடுக்கும் முதல் இயந்திரம் இந்த ஏடிஎம் தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இட்லி மட்டுமின்றி தோசை, சாதம் மற்றும் ஜூஸ்களை என்று அனைத்திற்கும் ஏடிஎம் உருவாக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதைப் பெங்களூர் நகர் முழுக்க பல இடங்களில் வைக்க திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications