கையை கவ்வி வந்த நாய்.. பெண் உடலை 10 துண்டாக வெட்டி வீசிய கொடூரம்! அதிர்ந்த கர்நாடகா.. ஷாக் பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் பெண்ணை கொன்று தலை, கை, கால் என உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி 10 இடங்களில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை அவரது லிவ் இன் பார்ட்னர் அஃப்தார் அமீன் பூனாவலா தான் படுகொலை செய்தார். கொலையை மறைக்க ஷ்ரத்தா வாக்கரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசியிருந்தார். இந்த வழக்கு நாட்டையே உலுக்கிப்போட்டது.

இந்நிலையில் தான் ஷ்ரத்தா வாக்கரின் கொலையை நினைவுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
கர்நாடகாவில் துமகூரு மாவட்டம் கொரட்டகெரோ தாலுகாவில் சிம்புகனஹள்ளி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முத்தியாலம்மா கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் கோவில் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது தெருநாய் ஒன்று துண்டாகி கிடந்த மனித கையை வாயில் கவ்வி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தெருநாயிடம் இருந்து கையை மீட்டனர். பிறகு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று கையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அது பெண்ணின் கை என்பது தெரியவந்தது. அதோடு அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடுத்தடுத்து இடங்களில் உடல் பாகங்கள் தனித்தனியாக கிடைத்தது. கை, தலை, கால்கள் என்று மொத்தம் 10 இடங்களில் இருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. பிளாஸ்டிக் கவர், துணிப்பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.
லிங்கபுரா ரோடு பாலத்தின் அருகே குடல், பென்டோன் நர்சரி அருகே வயிறு மற்றும் உடல் உள் உறுப்புகள், ஜோனிகாரஹள்ளியில் கால் கிடைத்தது. சித்தரபெட்டா மற்ம் நிகலால் இடையேயான ரோட்டில் பிற உடல் பாகங்கள் சிக்கியது. சித்தரபெட்டாவில் இறந்த பெண்ணின் தலை கிடைத்தது. யாரோ மர்மநபர், பெண் ஒருவரை கொன்று கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி 10 இடங்களில் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கொலையான பெண் யார்? பின்னணி என்ன? பற்றி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். முகம் சிதைந்து இருந்ததால் பெண்ணின் கையில் இருந்த டேட்டோ மூலமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இறந்த பெண்ணின் பெண்ண லட்சுமிதேவம்மா (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் துமகூரு மாவட்டம் பெல்லாவியை சேர்ந்தவர்.
இவரது கணவர் பெயர் பசவராஜ். கடந்த 3ம் தேதி லட்சுமி தேவம்மா தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு இரவில் அவர் வீடு திரும்பவில்லை. பசவராஜ் மற்றும் குடும்பத்தினர் லட்சுமி தேவம்மாவை பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து கணவர் பசவராஜ் சார்பில் பெல்லாவி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது.
போலீசார் லட்சுமி தேவம்மாவை தேடிவந்த நிலையில் அவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் லட்சுமி தேவம்மாவை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications