8 மணிநேரம்.. பூங்காவில் இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்த கும்பல்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூர் கோரமங்களா அருகே உள்ள தேசிய விளையாட்டு கிராம பூங்காவில் நண்பருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் வைத்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் சம்பவம் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் சில நபர்களால் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் தான் பெங்களூரில் ஆண்நண்பருடன் பூங்காவில் அமர்ந்து பேசி கொண்டிருந்த இளம்பெண்ணை கடத்தி ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

ஆண்நண்பருடன் பேசிய இளம்பெண்
பெங்களூர் கோரமங்களா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேஷனல் கேம்ஸ் வில்லேஜ் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். கடந்த 25ம் தேதி இரவில் இளம்பெண் ஒருவர் இந்த பூங்காவில் தனது நண்பருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். இருவரும் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற மர்மநபர்கள் அவர்கள் 2 பேரிடமும் தகராறு செய்துள்ளனர்.

காரில் கடத்திய கும்பல்
மேலும் இளம்பெண்ணை அவர்கள் கிண்டல் செய்துள்ள நிலையில் அதனை அவரது நண்பர் கண்டித்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணின் நண்பரை அந்த கும்பல் தாக்கி உள்ளது. இதை தடுக்க சென்ற இளம்பெண்ணையும் அவர்கள் தாக்கி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். இதை அவரது நண்பர் தடுக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் அந்த கும்பல் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றது.

ஓடும் காரிலேயே பலாத்காரம்
இதையடுத்து டொம்லூர், இந்திரா நகர், ஆனேக்கல், நைஸ் ரோடு என சுற்றிய அந்த கும்பல் ஓடும் காரிலேயே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. தன்னை விட்டுவிடும்படி இளம்பெண் கெஞ்சியும் கூட அந்த கும்பல் அவரை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கவும் இளம்பெண்ணால் முடியவில்லை.

8 மணிநேரம் தொல்லை
சுமார் 8 மணிநேரம் ஓடும் காரில் இளம்பெண்ணை அவர்கள் துன்புறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு இளம்பெண்ணிடம் அவரது முகவரியை அந்த கும்பல் கேட்டுள்ளது. அவர் கூறிய நிலையில் மார்ச் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இளம்பெண்ணை அவரது வீட்டு அருகே காரில் இறக்கிவிட்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகி உள்ளது. இதையடுத்து இளம்பெண் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

4 பேர் கைது
மேலும் சம்பவம் குறித்து கோரமங்களா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். இந்த விசாரணையின் அடிப்படையில் போலீசார் 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சதீஷ், விஜய், ஸ்ரீதர் மற்றும் கிரண் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் மார்ச் 25ம் தேதி இரவு நடந்துள்ளது. இதுபற்றிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடக்கிறது'' என்றனர்.












Click it and Unblock the Notifications