காதல் கணவருடன் சென்ற தங்கை.. பேருந்தில் ஏறி அண்ணன்கள் செய்த கொடூரம்.. ராமேஸ்வரம் பகீர்!
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். மீனவர். இவரது மகன் வினித்(22). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் பில்கேஸ்(22) என்பவரும் காதலித்து வந்தனர்.
Recommended Video
இருவரின் காதலுக்கு பில்கேஸ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். விரைவில் நிச்சயம் நடக்க இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பில்கேஸ் வீட்டை விட்டு வெளியேறி காதலன் வினித்துடன் சென்றார்.

காதல் ஜோடிகள்
இரு வீட்டாருக்கும் பயந்து காதல் ஜோடிகள் கோவை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும்
அங்கிருந்து நேற்று காலை ராமநாதபுரம் வந்தனர். நேராக ராமநாதபுரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற இருவரும் பாதுகாப்பு கேட்டு சரண் அடைந்தனர். இதனை தொடர்ந்து காதல் ஜோடிகளின் குடும்பத்தினரை போலீசார் வரவழைத்தனர்.

திருமணம் செய்து வைத்தனர்
பின்னர் இருவருக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் இரு தரப்பு பெற்றோரிடமும் சமாதானம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வினித், பில்கேஸ், வினித்தின் தந்தை ஜஸ்டின், தாய் குளோரியா, ஆகியோர் ஊருக்கு அரசு பேருந்தில் புறப்பட்டு சென்றனர். மண்டபம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது.

தங்கையை வெட்டினார்கள்
அப்போது பில்கேசின் அண்ணன்கள் யாகப்பா, ஆண்டனி ஆகியோர் பேருந்தில் ஏறினார்கள். தொடர்ந்து அவர்கள் இருவரும் வாள் மற்றும் பிளேடால் தங்கை பில்கேஸ், அவரது காதல் கணவர் வினித் ஆகியோரை திடீரென வெட்டினார்கள். ஜஸ்டின், குளோரியா இதனை தடுக்க முயன்றபோது அவர்களுக்கும் வாள், பிளேடால் வெட்டு விழுந்தது.

மடக்கி பிடித்தனர்.
இதனால் அவர்கள் 4 பேரும் கூச்சலிட்டனர். மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு எகிறி குதித்து ஓடினர். தங்கையை வெட்டி விட்டு தப்பி ஓடிய யாகப்பா, ஆண்டனியை அந்த பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

4 பேருக்கு சிகிச்சை
யாகப்பா, ஆண்டனியை மண்டபம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications